பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்து அடுத்த குழப்பத்தை ஏற்படுத்த பாஜக தயாராகி வருவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக முரசொலி எழுதியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
“அடுத்த குழப்பத்தை ஏற்படுத்த பாஜக தயாராகி வருகிறது.இந்தியாவில் பொதுசிவில் சட்டம் என்பது தான் அவர்கள் எடுக்கப்போகும் குழப்ப அஸ்திரமாக இருக்க போகிறது. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும் இல்லை. உழவர்கள் விலை பொருள்கள் விலையை இருமடங்கு ஆக்கவும் இல்லை. அடுத்த ஆண்டு ஓட்டு கேட்டு வர வேண்டியதுள்ளது.
இனிமேல் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது பணமும் இல்லை. என்ன செய்யலாம் என யோசித்த பாஜக பொது சிவில் சட்டத்தை கையில் எடுக்கப்போகிறது. அதற்கான வேலையை சட்ட ஆணையம் மூலம் தொடங்கி இருக்கிறார்கள்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு முரணானது.- மதசார்பின்மைக்கு எதிரானது. நாட்டின் பன்முகத்தன்மையை பொதுசிவில் சட்டம் மூலம் சமப்படுத்த முடியாது.
- சமூகத்தின் பலவீனமான குழுக்கள் தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை இழக்கக்கூடாது.
- முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது என்பது அனைத்து வேறுபாடுகளையும் நீக்குவது அல்ல.
- வெவ்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள் இருப்பது என்பது பலமான ஜனநாயகப் பண்பையே காட்டுகிறது.
- என்றெல்லாம் சொன்னது 21ஆவது சட்ட ஆணையம். இவை அனைத்தையும் பட்டவர்த்தனமாக நிராகரித்தது பாஜக.தான்.
விவாகரத்து, வாரிசு, பரம்பரை, தத்தெடுப்பு, பாதுகாவலர் ஆகிய விவகாரங்களில் வெவ்வேறு சட்டம் பயன்படுத்தப்படுவது அவமானம் என்றால் தீண்டாமையால் ஒரு மனிதன் புறக்கணிக்கப்படுவது இந்த நாட்டின் அவமானம் அல்லவா? சனாதனத்தை ஒரு மாநிலத்தின் ஆளுநர் பகிரங்கமாக ஆதரித்து பேசுவதும்- பெண் என்பதால் ஒரு பழங்குடி குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்படுவதும் தேசத்தின் அவமானம் இல்லையா?ஜாதி இல்லை அனைவரும் சமம் என்று ஏன் பொதுசமூக சட்டம் கொண்டுவர முடியவில்லை?
‘தீண்டாமையை சட்டப்படி ஒழிப்பதால் பயனில்லை, ஜாதி பார்ப்பது குற்றம் – அதனை சட்டப்படி தடை செய்யுங்கள்’ என்று தந்தை பெரியார் தானே சொன்னார். ‘பொதுவானவர்கள்’ எங்கே போனார்கள்? இது பற்றி பொதுவானவர்கள் கருத்துச் சொல்லி இருக்கிறார்களா? வேறுபாடு கற்பிக்கும் இவைதான் தேச அவமானங்கள்.திருமணம், சொத்து ஆகியவற்றில் மதங்களுக்குள் இருப்பவை மாறுபட்ட பழக்க வழக்கங்கள். யாரையும் தாழ்த்தவும் இல்லை, உயர்த்தவும் இல்லை. உண்மையான தேச அவமானம் துடைக்க முயற்சிக்காமல் தேசத்தில் குழப்பம் ஏற்படுத்தத் துடிக்கவே பொதுசிவில் சட்டம் என்பதைக் கையில் எடுக்கிறார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






