முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

இபிஎஸ் டெல்லி பயணம் நடந்தது என்ன…? பாஜக வகுக்கும் வியூகம் – இரட்டை இலக்கத்தில் களமிறங்க திட்டம்


ஜோ மகேஸ்வரன்

கட்டுரையாளர்

”அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்… அண்ணாமலையோடு எந்த தகராறும் இல்லை…” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அவரது டெல்லி பயணத்தின் முக்கியத்துவம் குறித்து பார்க்கலாம்….

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைப் பொதுத் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று இருகட்சிகளின் தலைவர்களும் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது இருபக்கத்திலும் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களின் சர்ச்சை கருத்துகளால், இந்த கூட்டணி தொடருமா? என்கிற கேள்வியும் ஒருபக்கம் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் அணுகுமுறை, தனித்து போட்டியிட விரும்புவதாக அண்ணாமலை பேசியதாக வெளியான செய்தி, சிடி நிர்மல்குமார் தொடங்கி பாஜகவில் இருந்து விலகி தொடர்ந்து அதிமுகவில் சேரும் பிரமுகர்கள், ’’அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்’’ என்ற அண்ணாமலையின் அறிவிப்பு, அது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’’முதிர்ச்சியான அரசியல் தலைவரை பற்றி கேளுங்க. நான் பதில் சொல்றேன்.

அவரை பத்தியெல்லாம் கேக்காதீங்க…’’னு காட்டமாக பதில் தந்த எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவையும் பாஜகவின் நாராயணன் திருப்பதி, அமர்பிரசாத், வி.பி துரைசாமி அதிமுகவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் சிலரின் விமர்சனங்கள் விவாதப் பொருளாகி வந்தன.

சர்ச்சைகளுக்கு இடையில் டெல்லி பயணம்

இவற்றால், கூட்டணி தொடருமா? என்கிற கேள்வியும் மீண்டும் மீண்டும் எழுந்தன. கர்நாடகத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, பாஜகவின் வேண்டுகோளை ஏற்று வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அதிமுக அறிவித்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுகவில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், எம்,ஆர். விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். வரும் 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசித்தாகவும் சொல்லப்படுகிறது.

அண்ணாமலையுடன் தகராறு இல்லை – இபிஎஸ்

சந்திப்பு முடிந்தும் டெல்லியில் தங்கியிருந்த இபிஎஸ் மறுநாள் காலை செய்தியாளர்களைச் சந்தித்த போது, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது. தொடரும் என்று உறுதியாக சொன்னார். உங்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான கருத்து வேறுபாடு குறித்தும் ஏதேனும் அமித்ஷாவுடனான சந்திப்பில் பேசப்பட்டதா? என்கிற கேள்விக்கு, ’’எங்களுக்கும் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் கிடையாது. கூட்டணியில் குளறுபடி, விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்று உள்நோக்கத்துடன் இது போன்ற கேள்வி கேட்கப்படுகிறது’’ என்றவர். ’’எங்க கூட்டணி கட்சியினர் சுதந்திரமானவர்கள். திமுக கூட்டணி போல் அடிமைகள் இல்லை. திமுக கூட்டணிக் கட்சிகள் 10 ஆண்டுகளாக அமைதியாக இருக்கின்றனர்…’’ என்றார் கடுமையாக.

தொகுதி பங்கீடு குறித்த பேச்சு

மேலும், டெல்லி சந்திப்பில், கூட்டணி குறித்து மட்டுமல்ல, தொகுதிகள் பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாமக 7, பாஜக 5, தேமுதிக 4 தொகுதிகளில், தமிழ் மாநிலக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிட்டன. இதில், தேனியில் போட்டியிட்ட ஒ.பி.ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணியில், பாமக, தேமுதிக இரண்டும் இருக்குமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளின் செயல்பாடுகள் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது மட்டுமின்றி அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் அமமுக என்கிற கட்சியை நடத்தி வருகிறார். இபிஎஸ் – ஓபிஎஸ் பிரிவு, வி.கே.சசிகலாவின் நிலை உள்ளிட்டவற்றையும் கணக்கில் கொண்டு 15-20 தொகுதிகளை பாஜக கேட்பதாகவும், கோவை, நீலகிரி, சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 10 தொகுதிகளில் பாஜக பணிகளைத் தொடங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தொண்டர்கள் இணைவார்களா?

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால், தொகுதிப் பங்கீடு குறித்தெல்லாம் இறுதி முடிவு செய்யப்படவில்லை. ஆனாலும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிடுவதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில், 2014ம் ஆண்டு தனித்து நின்று 37 இடங்களில் வென்ற அதிமுக இப்ப 25 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட வேண்டும் என்று மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள் என்கிறார்கள். ஓரிரு மாதங்களில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து, தேர்தல் பணிகளைத் தொடங்கி விட வேண்டும் என்று டெல்லி மேலிடம் விரும்புவதாக சொல்லப்படுகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கட்சி நலன் சார்ந்து விரும்பினாலும் கூட்டணி உறுதி என்றாலும் தொகுதி பங்கீட்டின் போது மீண்டும் உரசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

டெல்லி சந்திப்பில் கூட்டணி குறித்த தொடர் சர்ச்சை, கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுப்புள்ளி இது தற்காலிகமா…? நிரந்தரமா? அமைந்திருப்பது யதார்த்தமான கூட்டணியா? வேறு வழியின்றி கூட்டணியா? தலைவர்களைப் போல தொண்டர்களும் இணைவார்களா..? இணைந்து வாக்காக மாறுமா..? காத்திருப்போம்….

இந்த செய்தியை வீடியோவாக காண – https://youtu.be/RQHND5iYqZ0

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram