பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள சோழ தேசத்து பெண்கள் சினிமா ரசிகர்களால் வெகுவாக பாரட்டப்பட்டுள்ளனர்.
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் பிரமாண்டமாக உருவாக்கிய படம்தான் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற முதல் பாகத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தாலும் ஆண் கதாபாத்திரங்களுக்கு நிகராக பெண் கதாபாத்திரங்களும் மக்களால் பெரிய அளவில் இப்படத்தின் வாயிலாக பேசப்பட்டுள்ளன. வரலாற்று படங்கள் பலவற்றில் ஆண் கதாபாத்திரங்கள் திரையில் அதிக ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தியாவின் சினிமா பாணியையே புரட்டிப் போட்ட பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா மற்றும் சத்தியராஜுக்கு நிகராக பெண் கதாபாத்திரங்கள் கொண்டாடப்படவில்லை. ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தில் கூட ஆலியா பட்டின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.
இயக்குனர் மணிரத்னத்தின் சினிமா பாணி..!
இயக்குனர் மணிரத்னத்தின் படங்களில் ஆண் கதாபாத்திரங்களுக்கு நிகராக பெண் கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளன. மௌனராகம் படத்தில் வரும் ரேவதியின் “திவ்யா” கதாபாத்திரம் முதல் ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்றுள்ள நித்யா மேனனின் “தாரா” கதாபாத்திரம் வரை ஆழமாகவும் அதேபோல மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
அலைபாயுதே படத்தில் சாலினியின் சக்தி கதாபாத்திரம் காதலை வெளிப்படுத்தும் ஒவ்வொரு ஆணும் பயிற்சி செய்யும் விதமாக அமைந்தது. அதேபோல பம்பாய் படத்தில் மனீஷா கொய்ராலா, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிம்ரன், ரோஜா படத்தில் மதுபாலா, ஆயுத எழுத்து படத்தில் மீரா ஜாஸ்மின், காற்று வெளியிடை படத்தின் அதிதி ராவ் ஹைதரி என மணிரத்னத்தின் படங்கள் பெண் கதாபாத்திரங்களை கொண்டாடியுள்ளன.
பொன்னியின் செல்வன் படத்தில் சோழ தேசத்து பெண்கள் :
பொன்னியின் செல்வன் படத்தில் பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்தாலும் இப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக நந்தினி, குந்தவை, பூங்குழலி மற்றும் வானதி ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
நந்தினி – ஐஸ்வர்யா ராய் :
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலியான நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் பேரழகால் சோழ தேசத்தையே கட்டிப் போட்டவர். நந்தினியின் ஆயுதமே அவளது பேரழகும் , புத்தி கூர்மையும் தான். ஆதித்த கரிகாலனுடனான தனது காதல் கைகூடாமல் போகவே தனது குடும்பம் அநாதையாக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பெரிய பழுவேட்டையாரை திருமணம் செய்து கொண்டு நேரடியாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வீர தீர மங்கையாக இடம்பெற்றுள்ளார் நந்தினி.
சுந்தர சோழனின் இரண்டாவது மகளான குந்தவை தேவி புத்திக் கூர்மையுடையவள். குந்தவை தேவியாக நடித்துள்ள த்ரிஷா மிகப் பொருத்தமாக கதாப் பாத்திரத்தோடு ஒன்றிப் போகிறார். சுந்தர சோழன் தனது ராஜ்ஜியத்தைக் காப்பாற்றுவதற்கான வழிகளை வகுக்க குந்தவைதான் உதவுகிறார். போர்களின்போது தனது மகன்களை நம்பியிருப்பது போல தந்திரங்களை வகுப்பது, ஒற்றர்களை வைத்து எதிரி நாட்டின் அசைவுகளை கண்காணிப்பதற்கு சுந்தர சோழன் குந்தவையை நம்பியிருக்கும்படியாக கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூங்குழலி – ஐஸ்வர்யா லக்ஷ்மி :
தனக்கு பிடித்த வேலையான படகினை கடலில் செலுத்தி இலங்கைக்கு சென்று திரும்பும் பெண்ணாக பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மீனவ குலத்தில் பிறந்தாலும் ராணிக்குரிய அத்தனை இயல்புகளையும் கொண்டவளாக படம் முழுக்க ரசிக்கும்படியாக அவர் காட்சியளித்துள்ளார். சூறைக்காற்று அடிக்கும்போது துடுப்பால் புறந்தள்ளி அருண்மொழி வர்மனை கரை சேர்க்கும் துணிச்சலும், சொல்ல முடியா காதலை சுமந்திருக்கும் மென்மையும் பூங்குழலி கதாபாத்திரத்தை அனைவருக்கும் பிடிக்க வைத்துள்ளது.
குந்தவையின் நெருங்கிய தோழியாகவும் கொடும்பாளூர் இளவரசியாகவும் உள்ள வானதி கதாபாத்திரத்தில் சோபிதா துலிபாலா நடித்துள்ளார். இளவரசி குந்தவை தேவியுடன் நெருக்கமான தோழியாக இருக்கும் வானதிக்கு அருள் மொழி வர்மனை திருமணம் செய்வதுதான் பிறவி பலனே. வானதி கதாபாத்திரம் அருள் மொழி வர்மன் மீதான காதலை மனதில் தேக்கி வைத்து காத்திருப்பது போன்று படத்தில் காட்டப்பட்டுள்ளது. அமைதியான சுபாவமும், அதிக நாணமும் கொண்ட இந்த கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தன் தைரியத்தை வெளிப்படுத்தியதை கண்டு பார்வையாளர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போயினர்.









