தமிழ்நாட்டில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு புதுச்சேரியை பற்றி என்ன தெரியும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை முழு நிலவு நாளை முன்னிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், தேனீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்கள் எதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அளித்த தேநீர் விருந்தையும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தேநீர் விருந்துக்கு பின் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் தான் பயணிப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு புதுச்சேரியை பற்றி என்ன தெரியும் என்றும் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.







