இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21ம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன், முதல் முறையாக 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். வரும் 21ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு வருகை தரும் அவர், அங்கு முன்னணி வர்த்தக நிறுவனங்களைச் சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதிக்க உள்ளார். இதனை தொடர்ந்து 22ம் தேதி டெல்லி செல்லும் போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தோ – பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, பொருளாதாரம், எரிசக்தி உள்பட பல்வேறு துறைகள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என தெரிகிறது. இரு நாடுகள் இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடியுடன் போரிஸ் ஜான்சன் விவாதிப்பார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரிஸ் ஜான்சனின் இந்தப்பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. இதனால், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவுக்கு வர அந்நாடு தடை விதித்துள்ளது. அதேவேளையில், இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது. அதற்கு காரணமாக கூறப்படுவது, இந்தியா பல ராணுவ உபகரணங்களை ரஷ்யாவிடம் இருந்தே வாங்கி வருவதே. இந்நிலையில், பிரதமருடனான போரிஸ் ஜான்சன் சந்திப்பின்போது ராணுவம் சார்ந்த பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.







