சிங்கப்பூரில் என்ன செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்?

சிங்கப்பூர் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு என்னென்ன பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார் என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்… 2030 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான…

சிங்கப்பூர் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு என்னென்ன பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார் என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்…

2030 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான இலக்கினை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி, இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன்மூலம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 4  லட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அயல்நாடுகளுக்கு பயணம்:

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக மே 23 ஆம் தேதி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

23.5.2023:

சென்னையிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்ட முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். சிங்கப்பூர் சென்ற முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

24.5.2023: முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு

Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களையும், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனையும் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு:

சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த முதலீட்டாளர் மாநாட்டில் 250 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

1) தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தமிழ்நாட்டில் தொழில்துறைகளின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

2) சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office – SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுனத்திற்கும் இடையே, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

3) சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகத்திற்கும் (Singapore India Partnership Office – SIPO), தமிழ்நாட்டின் FameTN மற்றும் TANSIM நிறுவனங்களும் இடையே, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப தொடர் கல்விக்கான திறன் மேம்பாடு, StartupTN மூலம் ஸ்டார்ட்-அப் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு கூட்டாண்மைகளை எளிதாக்குதல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

4) தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Hi-P International Pvt. Ltd., நிறுவனத்திற்கும் இடையே 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

5) தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே, தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் எதிர்கால மற்றும் தொழில்துறைக்கு தேவையான பாடத்திட்டம் மற்றும் பாட மேம்பாட்டிற்கான அறிவுப் பங்குதாரராக நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

6) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ITE Education Services நிறுவனத்திற்கும் இடையே, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறையில் நீண்ட கால கூட்டாண்மையை நிறுவுதல், தமிழ்நாட்டில் தொழிற்சாலை திறன் பள்ளிகளை அமைத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வேர்களைத் தேடி:

சிங்கப்பூர் தமிழ்ச்சங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில், “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் வரவேற்பு:

சிங்கப்பூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… லீ குவான் யூ அவர்களுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை நெடுவாக்கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு என்பதை நான் நன்றாக அறிவேன். இந்தக் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தான் அதிகம். எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

25.5.2023: உள்துறை அமைச்சருடன் சந்திப்பு

சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தை சந்தித்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

கொள்முதல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கான முறை (Methodology for Assessing Procurement Systems) முன்முயற்சியின் மூலம் தமிழ்நாடு தொழில்கள், சேவை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் இணையப் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஆதரவை விரிவுபடுத்துதல், மாநில நிறுவனங்களுக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், தரவு தனியுரிமை அம்சங்கள் போன்றவற்றில் அரசு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் உரையாடினார் சண்முகம்.

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சண்முகம் கோரிக்கை விடுத்தார். அதற்கு முதலமைச்சர், இது குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

லிட்டில் இந்தியாவில் தேநீர்:

சிங்கப்பூரில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் நாட்டிற்கு செல்வதற்காக சிங்கப்பூர் விமான நிலையம் செல்லும் வழியில், தமிழர்கள் அதிகமாக வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள உணவகத்திற்கு சென்று தேநீர் அருந்தினார். அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். முன்னதாக சிங்கப்பூர் வாழ் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.