பொள்ளாச்சியில் 2வது நாளாக நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலாத்துறை சார்பில் மூன்று நாட்கள் நடத்தப்படும் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக நேற்றுத் தொடங்கியது. பசுமையை இழுத்து போர்த்தியிருக்கும் பொள்ளாச்சியை வானில் பறந்தபடி சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் நோக்கில் சர்வதேச பலூன் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பலூன் திருவிழாவிற்காக பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 10 வகையான ராட்சத பலூன்கள் கொண்டு வரப்பட்டன. முதல் நாளில் 10 பலூன்கள் பறக்க விடப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான இன்று 12 பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
காலை நேரத்தில் வெப்பக்காற்று நிரப்பப்பட்ட பலூனில் பறப்பதற்கு ஒரு நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பொள்ளாச்சியில் சுமார் 10 கிலோமீட்டர் நிலப்பரப்பை 500 அடிக்கு மேல் பலூன்களில் பயணித்தபடி இயற்கை அழகை ரசிக்கலாம்.
அதேபோல் இரவு நேரங்களில் 100 அடி தூரம் வரை பயணிக்க ஒரு நபருக்கு ஒரு நபருக்கு ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி, பலூன் திருவிழாவில் பங்கேற்பவர்கள், ஹெலிகாப்டர் மூலமாக இயற்கையை ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பறப்பதற்கு ஒரு நபருக்கு 6000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதனிடையே சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. பலூன்களில் பறப்பதற்கான கட்டணத்தை குறைத்தால், இத்திருவிழாவில் பங்கேற்போர் எண்ணிக்கை கணிசமாக உயரும் என சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர்.







