இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இதனையடுத்து இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அரசு முறைப்பயணமாக பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரான்சின் அரசு செய்தி நிறுவனமான பிரான்ஸ் 24 சேனலுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது :
“அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன ராணுவம் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை. சீன வியாபாரிகளின் பயன்பாட்டில் அந்தத் துறைமுகம் இருந்தாலும் அதன் பாதுகாப்பு விவகாரங்களை இலங்கை அரசு கவனித்து வருகிறது.
சுமார் 1500 அண்டுகளாக சீனாவுடன் இலங்கைக்கு தொடர்பு உள்ளது. சீனாவின் ராணுவ படைத்தளம் எதுவும் இலங்கையில் இல்லை. சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அதுபோன்ற ஒப்பந்தம் போட அந்நாடு விரும்புவதாக தெரியவில்லை. இலங்கை எப்போதும் நடுநிலை நாடாக இருக்கும். இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தலுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என ரணில் விக்ரமசிங்கே கூறினார்.







