முதலமைச்சரை சந்தித்தபோது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக முரண்பட்டு பேசுவதாக முதலமைச்சரை சந்தித்து கூறியுள்ளோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக கூறினார். கடந்த ஆட்சியில் 4 ஆண்டுகளில் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பல போராட்டங்களை நடத்தியும் மனுவை கூட பெறவில்லை.
தற்போதைய திமுக அரசு ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் தொடர்பாக 3முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கோரிக்கைகள் தொடர்பான மனுவையும் முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். கடந்த ஆட்சியில் போராடியபோது போராட்டகளத்தில் வந்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என கூறியவர், உங்களில் ஒருவராக இருப்பேன் என பேசியவர் மு.க.ஸ்டாலின் என்றார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு வரும் செப்-10 ஆம் தேதி நடத்தவுள்ளோம். அதில் முதலமைச்சர் பங்கேற்கவுள்ளார். இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்கவுள்ளார்கள். திமுக அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என நினைத்தவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தான் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதி் தொடர்பான கோரிக்கையை முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
அவை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் போராடியபோதும் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை அதனால் போராட்டங்களை வீரியத்துடன் நடத்தினோம் என்ற அவர், தற்போது முதலமைச்சர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை நிறுவேற்றப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார் என்றார்.
– இரா.நம்பிராஜன்








