‘துணை முதலமைச்சர் உதவியால் சென்னை திரும்பினோம்’ – கபடி பயிற்சியாளர் பேட்டி !

துணை முதலமைச்சர் உதவியால் பாதுகாப்பாக பஞ்சாபில் இருந்து தமிழகம் திரும்பியதாக கபடி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

2024 – 2025 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டி பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டத்தில் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக
தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா, பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களில் இருந்து 36 வீராங்கனைகள் சென்றிருந்தனர்.

அவர்களுடன், 3 மேலாளர்கள், 3 பயிற்றுநர்கள் சென்றனர். அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையே போட்டி நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு-பீகார் இடையிலான போட்டியின்போது, வெற்றி புள்ளிகள் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு வீராங்கனையின் மீது தாக்குதல் நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில், பயிற்சியாளர் பாண்டியராஜனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் பஞ்சாப் கபடி போட்டியில் விளையாட சென்ற தமிழக வீராங்கனைகள் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கபடி பயிற்சியாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பற்ற சூழலில் இருந்தோம். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பின்னர் தான் நிலைமை மாறியது. தமிழக அரசின் தலையீட்டால் நாங்கள் பாதுகாப்பாக டெல்லி அழைத்து செல்லப்பட்டோம். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு பாதுகாப்பாக சென்னை அழைத்து வரப்பட்டோம்” என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.