நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்-முதலமைச்சர் ஸ்டாலின்

“தமிழகத்தை தொடர்ந்து ஆளப்போவது திமுக தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 ம் நமதே நாளை நமதே” என விருதுநகரில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஸ்டாலின் தெரிவித்தார். விருதுநகர் அருகே பட்டம்புதூரில்…

“தமிழகத்தை தொடர்ந்து ஆளப்போவது திமுக தான். வரும் நாடாளுமன்ற
தேர்தலில் 40 ம் நமதே நாளை நமதே” என விருதுநகரில் திமுக சார்பில் நடைபெற்ற
முப்பெரும் விழாவில் ஸ்டாலின் தெரிவித்தார்.

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், வருவாய்த் துறை அமைச்சரும் திமுக தெற்கு மாவட்டச் செயலருமான சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். அப்போது இந்த விழா நடைபெற உள்ள
மக்களவைத் தேர்தலுக்கான வெற்றி பெற்று தருவதற்கான அடித்தளமாக அமையும். 40க்கு
40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். டெல்லியில் யாரை அமர வைப்பது என்பதை ஸ்டாலின் அப்போது முடிவு செய்வார் என்றார்.

திமுக பொதுச் செயலர் துரைமுருகன் தலைமை வகித்தார். விழாவில் முன்னாள்
முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதங்களின் தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது. இதனை
முதல்வர் ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். திராவிட
மாடல் தொகுப்பு நூலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட டி.ஆர். பாலு எம்.பி.
பெற்றுக் கொண்டார்.

விழாவில், கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் உள்ள நான்கு மண்டலங்களில்
ஒன்றியம், நகரம், பகுதி, பேரூரில் கட்சிப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தலா
ஒருவருக்கு நற்சான்று மற்றும் ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, கட்சியின் முதன்மைச் செயலரும் நகராட்சி நிர்வாகத் துறை
அமைச்சருமான கே.என். நேரு, துணைப் பொதுச் செயலர்களான அமைச்சர்கள்
ஐ.பெரியசாமி, க.பொன்முடி மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர்
ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்.

இவ்விழாவில், சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா.மோகனுக்கு
அண்ணா விருது வழங்கப்பட்டது. இரா.மோகன் சார்பில். அவரது மகன் விருதைப்
பெற்றுக்கொண்டார். மேலும், திமுக பொருளாளரும் எம்.பி.யுமான
டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருதும், புதுவை சி.பி.திருநாவுக்கரசுக்கு
பாவேந்தர் விருதும், குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதும் தமிழக
முதல்வர் ஸ்டாலின் கரங்களால் வழங்கப்பட்டன. விருதைப்பெற்ற டி.ஆர்.பாலு
ஏற்புரையாற்றினார்.

பின்னர் சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டால் வளர்ச்சியில் தமிழகம்
முதலிடமாக உள்ளது. பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது – இது தான்
திராவிட மாடல் ஆட்சி.

தொண்டர்களால் உருவானவன் நான் நான் தனிப்பட்டு ஆட்சியில் அமரவில்லை- இனி
தமிழகத்தை தொடர்ந்து ஆளப்போது திமு கழகம்தான். ஒற்றை மொழியான இந்தி திணிப்பை நாம் ஏற்க முடியாது. புதிய கல்வி கொள்கை மூலம் நமது கல்வி உரிமையை பறிக்க பார்க்கிறார்கள்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சரக்கு-சேவை வரியால் நிதி உரிமை பறிக்கப்படுகிறது. தமிழக ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி அமைக்க பார்கிறார்கள். அதை
தடுப்பதற்கு 40 ற்கு 40 நாம் வெற்றி பெற வேண்டும்.

அதற்கான பணியை இந்த முப்பெரும் விழாவில் இருந்தே துவங்குங்கள். இந்தியாவில் 3 வது கட்சியாக நாம் இருப்பது பெருமை. 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். கழக தொண்டர்கள் இப்போது இருந்தே பணியை துவங்க வேண்டும். 40 ம் நமதே நாளை நமதே என்றார் முதல்வர் ஸ்டாலின்.

விழாவின் நிறைவில் தொழில்துறை அமைச்சரும் திமுக வடக்கு மாவட்டச் செயலருமான
தங்கம்தென்னரசு நன்றிவுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கண்ணப்பன், செந்தில் பாலாஜி, சுப்பிரமணியன், கீதா
ஜீவன், பெரிய கருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்பிக்கள் கனிமொழி,
தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், தனுஷ் எம்.குமார் உள்பட திமுக மாநில,
மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.