”நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கு தயாராகிவிட்டோம்” : ஜி.கே.வாசன் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் வியூக அமைப்பு பணிகளை தொடங்கி விட்டதாகவும், அதிமுக, பாஜக,தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகள் கொண்ட கூட்டணி வெற்றி பெறும் எனவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள…

நாடாளுமன்ற தேர்தல் வியூக அமைப்பு பணிகளை தொடங்கி விட்டதாகவும்,
அதிமுக, பாஜக,தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகள் கொண்ட கூட்டணி வெற்றி பெறும் எனவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் தெரிவித்ததாவது..

“கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும். இந்த பிரச்சினையில் திமுக கூட்டனி கட்சிகள் மௌனம் சாதிக்க கூடாது. அணை கட்டினால் காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும். இது பயிர் பிரச்சினை அல்ல, உயிர் பிரச்சினை.

திமுக அரசு மக்கள் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடிக்கிறது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல் மின் கட்டண உயர்வு ஏற்புடையது அல்ல. மின் கட்டணத்தை உயர்த்த கூடாது. கொங்கு மண்டல கனவு திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்ட பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் பெரும்பாலும் முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என செய்திகள் வெளிவருகிறது. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு திணறி வருகிறது என்பது தான் உண்மைநிலை. அரசு மக்களின் பணத்தை வீணடித்து வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் அல்லது குறைக்க வேண்டும். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்,சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமே டாஸ்மாக் மற்றும் போதைப்பொருட்கள் தான் அதை தடுக்க வேண்டும்.

பள்ளிகளின் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியின் தரம் குறையும். தேவைக்கு தகுந்தாற்போல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்து அதனை உறுதி செய்ய வேண்டும். பல அரசு பள்ளி கல்லூரி கட்டிடங்கள்
பழுதடைந்துள்ளது. இதை ஒரு காலக்கெடுவுக்குள் சரி செய்ய வேண்டும்

கோவை,திருப்பூர் உட்பட பல பகுதிகளில் காற்று மழையால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது. வருவாய் துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். தென்னை விவசாயிகள் வேதனையில் வாடி வருகின்றனர். தேங்காய் கொப்பறை விலை வீழ்ச்சியை போக்க குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயித்து கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.

கோவை மாவட்டம் முழுவதும் சூயஸ் நிறுவனத்தால் மண் தோண்டப்பட்டு சாலைகள்
குண்டும் குழியுமாக உள்ள நிலையில் மழைக்காலம் துவங்கும் முன் சாலைகளை சீரமைக்க வேண்டும். பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற
கோரிக்கை வலுத்து வருகிறது. பொள்ளாச்சியை தென்னை மாவட்டமாக அறிவித்தால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். கோவையில் இரண்டு ஆண்டுகளாக மெத்தனமாக நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க
வேண்டும்.

ஆவின் பணிகளுக்கு முறையான கண்காணிப்பு தேவை, அதிகாரிகள்  மக்களுக்கு சரியான முறையில் பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்ற முறையில் பேச கூடாது. .கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். தவறான எடுத்துக்காட்டாக இருக்கக்கூடாது.மாணவர்கள் ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டு பயணம் விளம்பரத்திற்காக இருக்க கூடாது. பயன்தரக்கூடிய பயணமாக இருக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது என்பது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும. இந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்றால் 24 மணி நேரமும் நடத்த வேண்டும்.

இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் செயல்பட்டு வருகிறது
தொடர்ந்து பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, தொழிலாளர் விரோத போக்கு இதை எல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் சரியான நேரத்தில் வாக்களிப்பார்கள். யார் தவறு செய்திருந்தாலும் அவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்

தமாகாவை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதையும், தேர்தல் பணிகளையும் துவங்கி விட்டோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகள் கொண்ட கூட்டணி வெற்றி பெறும்” எனவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.