உத்தரபிரதேச மாநிலத்தில், ஷியா பிரிவு மத்திய வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர், இந்து மதத்துக்கு மாறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் வாசீம் ரிஜ்வி. அங்குள்ள ஷியா பிரிவு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர். இவர், அந்த பதவியில் இருந்தபோது ஊழல் புகார் எழுந்தது. இதில் ரிஜ்வி மீது பதிவான வழக்குகள், சிபிஐக்கு மாற்றப்பட்டது. தன் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என அரசுக்கு ரிஜ்வி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 4 ஆம் தேதி இவர் எழுதிய, முகம்மது நபி பற்றிய ‘முகம்மது’ என்ற நூல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக கூறி, ஷியா பிரிவு மட்டுமின்றி ஷன்னி பிரிவு இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த விவகாரத்தில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ரிஜ்வி தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்பும் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசியவர் வாசிம் ரிஜ்வி. இதனால், முஸ்லிம் மவுலானாக்கள் இவரை காஃபீர் என கூறி மதத்திலிருந்து ஒதுக்கி வைத்தனர். இந்நிலையில் ரிஜ்வி, காஸியாபாத்தின் மகாகால் தாஸ்னா கோயில் மடத்தில் பூஜைகள் செய்து நேற்று இந்து மதத்துக்கு மாறினார். மடத்தின் தலைவர் நரசிம்மானந்த்கிரி மகராஜ் முன்னிலையில் இந்து மதத்துக்கு மாறிய இவர், தனது பெயரை ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி என மாற்றிக்கொண்டார்.
மதமாற்றத்தின் போது, சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகமும் யாகம் வளர்த்து பூஜையும் செய்தார் ரிஜ்வி. மதம் மாறியது குறித்து ஜிதேந்தர் நாராயண் சிங் கூறும்போது, ’இஸ்லாமிய மதத்தில் இருந்து ஒதுக்கி வைத்ததால் இந்துவாக மாறி விட்டேன். இனி இந்து மதத்துக்காக பாடுபட போகிறேன். உலகின் மிகப்பெரிய புனித மதமாக சனாதன தர்மம் உள்ளது’ என்றார்.









