ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் நிற்க முடியாமல் அவதிப்படும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்தே, விளாதிமிர் புடினின் உடல்நிலை குறித்து உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அலுவலர் ஒருவர் கூறியதாக பிரபல நாளிதிழான இண்டிபெண்டன்ட் செய்தி வெளியிட்டது. புடினுக்கு ரத்து புற்று நோய் இருப்பதாக, அவரது பாதுகாவலர்களில் ஒருவர் கூறியது தொடர்பான ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோவில் நடைபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் நிகிதா மிகாய்லோவ்-க்கு விருது வழங்கும் விழாவில் அதிபர் விளாதிமிர் புடின் பங்கேற்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சியில் புடின் நின்றபடி பேசும் அந்த வீடியோவில், நிற்க முடியாமல் அவரது கால்கள் தடதடவென ஆடுவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
உக்ரைனுடனான போர் தொடங்கி 100 நாட்களை கடந்துள்ள நிலையில், அது எவ்வாறு முடிவுக்கு வரும் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
இந்நிலையில், போருக்குக் காரணமான விளாதிமிர் புடினின் உடல்நிலை பலவீனப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் இந்த வீடியோ, சர்வதேச அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.








