டி-20 கிரிக்கெட் போட்டிகளில், விராத் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 39-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ராகுல் சாஹர், டிரென்ட் போல்ட் மற்றும் மில்னே தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர், 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணி, 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகப்பட்சமாக, ரோகித் சர்மா மட்டும் தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராத் கோலி, 13-வது ரன்னை கடந்த போது டி-20 அரங்கில் 10 ஆயிரம் ரன்னை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது சர்வதேச வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
இதுவரை 314 போட்டியில் விளையாடியுள்ள அவர், 5 சதம், 74 அரைசதம் உள்பட 10,038 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (14,275 ரன்), பொல்லார்ட் (11,195 ரன்), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (10,808 ரன்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (10,019 ரன்) ஆகியோர் இந்த சிறப்பை மைல்கல்லை எட்டியுள்ளனர்.








