இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா, கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.2 கோடியை வழங்கி உள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவைப் பாதித்து வருகிறது. நாள்தோறும் நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குப் படுக்கை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆக்சிஜனுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். மேலும் வறுமையில் வாடும் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அவர்களின் மருத்துவச் செலவிற்கே ஒரு தொகை போய்விடும். இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்காகப் பல பிரபலங்கள் உதவி வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது மனைவி மட்டும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.2 கோடி வழங்கி உள்ளனர்.
இருவரும் இணைந்து கெட்டோ என்ற சமூக வலைத்தளத்தின் மூலம் ரூ. 7 கோடி கொரோனா நிவாரண நிதி திரட்ட இருக்கின்றனர். அதில் முதல் கட்டமாக ரூ. 2 கோடியை வழங்கி உள்ளனர். மேலும் மீதியுள்ள தொகையைத் திரட்டுவதற்காக 7 நாட்கள் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் கண்டு, மன வருத்தம் ஏற்பட்டதாகவும், கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவி வருவதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.







