Racism…. இந்தியளவில் டிரெண்டிங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஹேஷ்டேக் இது.
ஆஸ்திரேலியாவில் இதற்கு முன்பு இனவெறி சம்பவங்கள் நிறைய அரங்கேறி இருக்கின்றன. அந்நாட்டு ரசிகர்கள் இனவெறித் தாக்குதலை பல நாட்டு வீரர்களிடத்திலும் நடத்தி இருக்கின்றனர். ஆனால், இம்முறை இந்திய வீரர்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் அநாகரீகத்தின் உச்சக்கட்டம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மூன்று நாட்களாக இந்திய அணியின் பும்ரா, சிராஜ் ஆகிய வீரர்களை அவர்கள் அவமதித்த விதம், சக இந்திய வீரர்களை ரொம்பவே கொதிப்படையைச் செய்திருக்கிறது.
போட்டி முடிந்த பிறகு ரவிச்சந்திரன் அஷ்வின் உதிர்த்த ஆக்ரோஷ வார்த்தைகளே, வீரர்கள் எந்தளவுக்கு காயப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி.
இதுகுறித்து அஷ்வின் கூறுகையில், “சிட்னியில் கடந்த காலத்தில் எங்களுக்கு இதேபோன்று சில அனுபவங்கள் ஏற்பட்டன. ஆகையால் இந்த முறை புகார் அளித்துள்ளோம். ஆஸ்திரேலிய ரசிகர்கள் அநாகரீக வார்த்தைகளை தொடர்ந்து எங்கள் மீது வீசினர். இதுபோன்ற அவமதிப்புகளை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.
இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பியிருக்கும் கேப்டன் கோலி, ஆஸ்திரேலிய ரசிகர்களின் நடத்தையை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், “இனரீதியான சாடல் என்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுவரை பவுண்டரி லைன் அருகே எத்தனை மோசமான வசவுகளை சந்தித்து அதை கடந்திருந்தாலும், இந்த சம்பவம் அவற்றையெல்லாம் விட ரவுடித்தனத்தின் உச்சமாக உள்ளது. களத்தில் இதுபோன்று நடப்பதைக் கண்டால் வருத்தமாக இருக்கிறது.
இந்த சம்பவத்தை மிக விரைவாகவும், தீவிரத்துடனும் அணுகி குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோலியின் இந்த பதிவைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும், ‘ஒரு வீரராக கோலியை டெஸ்ட் தொடரில் மிஸ் செய்வதை விட, ரசிகர்களுக்கு நேரடியாக நின்று தரமான பதிலடி கொடுக்க இல்லாமல் போயிட்டாரே’ என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.