90-களின் நாயகனாக விளங்கிய யமஹா RX 100, மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1996-ம் ஆண்டு உற்பத்தி நிறுத்தப்பட்ட யமஹா rx 100 பைக் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளதாக உலா வரும் செய்தி, அதன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான் நிறுவனமான யமஹா, இந்தியாவில் காலூன்றுவதற்கு rx 100 மாடல் முக்கிய காரணமாக இருந்தது. அதன் தனித்துவமான சத்தத்திற்கே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. rx 100 மாடல் உற்பத்தி நிறுத்தப்பட்டு 20 ஆண்டுகளை கடந்தும், இன்றும் அதன் மவுசு குறையாமல் உள்ளது.சினிமாவில் கதாநாயகர்கள் தொடங்கி இன்றைய 2k கிட்ஸ் வரை அனைவரின் முதல் சாய்சாக இருப்பது rx 100.
1990-களில் 20 ஆயிரத்திற்கு வாங்கப்பட்ட rx 100 பைக்குகள் தற்போது லட்சங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுவே அதன் மீது இருக்கும் தீரா காதலை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு காலங்களை கடந்து நிற்கும் rx 100 மாடல் பைக்குகளை, யமஹா நிறுவனம் மீண்டும் சந்தைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய யமஹா நிறுவனத்தின் இந்திய தலைவர் இஷின் சிஹானா, யமஹா rx 100 மாடலை மீண்டும் சந்தைக்கு கொண்டு வருவதில் முனைப்பாக இருப்பதாகவும், ஆனால் அதில் சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக rx 100 பைக்குகள், 2 ஸ்ட்ரோக் எஞ்சினை அடிப்படையாக கொண்டு இயங்குபவை. தற்போது அமலில் இருக்கும் புகை விதிகள் காரணமாக 2 ஸ்டிரோக் எஞ்சின் இல்லாமல், பி.எஸ்.6 தரத்தில் புதிய எஞ்சினை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வின்டேஜ் rx 100 மாடல் பைக்குகளாக, அவை உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-சந்தோஷ்








