விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு ; கைதுசெய்யப்பட்டவர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்…..!

தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த +2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரின் பிண்ணனி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக் கழிக்க சென்ற நிலையில் காணாமல் போனார். இதனை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மாணவியை ஒரு நாள் முழுவதும் தேடினர்.

இந்த சூழலில் கடந்த 11ஆம் தேதி அதே காட்டுப் பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் தரப்பில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு, மாணவியின் உறவினர்கள், கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளி மாணவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனையும் காவல்துறையினர் எடுத்து அதன் முடிவுகளுக்கு காத்திருக்கின்றனர். ஆனாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை தொடர்ந்து திணறி வந்தது.

இந்த நிலையில் வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இருசக்கர வாகனம் ராம்நாடு மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்ம நபரால் திருடி கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது. அந்த இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்ற காவல்துறையினர் அங்கே சிசிடிவி தகவல்களை கொண்டு ஆய்வு செய்ததில் அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி வந்திருப்பது தெரிய வந்தது. திருடிய இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் அந்த காட்டு பகுதிக்கு எதற்கு வந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்

இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு கிராம மக்கள் யாரேனும் உதவி செய்தனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் வேடநத்தம் கிராமத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (30) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  குற்றவாளியை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு கோவில்பட்டி அருகே கீழ ஈரால் என்ற இடத்தில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும்  மூதாட்டியை கொலை செய்த வழக்கில் தர்ம முனீஸ்வரன், ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.