நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், கால அவகாசம் வழங்காததை தேமுதிக கண்டித்துள்ளது.
இது குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், “”எவ்வித கால அவகாசமும் வழங்காமல் உடனடியாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டது ஏன்? இதிலிருந்து ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருக்கலாம் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பிலேயே இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதில் இருந்து, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பட்டவர்த்தமாகத் தெரிகிறது. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். இதுவரை நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வழங்கிய கால அவகாசத்தை போல் இந்த தேர்தலிலும், வழங்கினால்தான், அனைத்து வேட்பாளர்களும் தங்களை தயார் செய்து கொள்ள ஏதுவாக அமையும். pic.twitter.com/rqrn4vMX0I
— Vijayakant (@iVijayakant) January 27, 2022
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து பல நாட்கள் ஆன நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் விடுபட்ட மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
ஜனவரி 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுவதாகவும், பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அதேபோல பிப்.5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை எனவும், பிப்.7ம் தேதி மனுவை வாபஸ் பெற இறுதி நாள் என்றும் அதேபோல வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடைபெறம் என்றும் அறிவித்துள்ளார். அதன்படி இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
Advertisement: