ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 1,3 மற்றும் 5வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இரவு நேர ஊரடங்கு, வழிபாட்டு தலங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பிப்.1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை பொறுத்த அளவில், ஏற்கெனவே அறிவித்தப்படி ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தேர்வுகளை பொறுத்த அளவில் 1,3 மற்றும் 5வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும். மாணவர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டும். செய்முறை உள்ளிட்டத் தேர்வுகளில் அவர்கள் பங்கேற்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பி்ப்.19ம் தேதியன்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வுகள் மாற்றுத் தேதி குறிப்பிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement: