பள்ளிக் கல்வியில் சாதித்த மாணவர்களை தொகுதிவாரியாக நேரில் அழைத்து பரிசுத் தொகை வழங்கியுள்ள நடிகர் விஜய் தனது அரசியல் கணக்கை அறுவடை செய்வாரா என்பது குறித்து விரிவாக காணலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜரை மாணவர்கள் வாசிக்க வேண்டும் எனவும், வாக்களிக்கும்போது பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க கூடாது எனவும் மாணவர்களிடம் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார்.
அடுத்த தலைமுறை வாக்காளர்களான மாணவர்களிடம் நீண்ட அரசியல் உரையை நிகழ்த்திய நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நெஞ்சில் குடியிருக்கும்…..!!! :
தமிழ்நாடு அரசியலின் அரை நூற்றாண்டு கால வரலாற்றில் இரண்டு முக்கிய கட்சிகள்தான் ஆட்சியை நிர்மாணித்து வருகின்றன. அவற்றில் ஒன்று திமுக மற்றொன்று அதிமுக. இரண்டு கட்சிகளும் தங்களது கோடிக்கணக்கான தொண்டர்களை உணர்வு ரீதியாகவே அணுகினர். அப்படி உணர்வு ரீதியாக தொண்டர்களை அழைப்பதற்கு ஒரு சொற்றொடர் தேவைப்பட்டது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனது தொண்டர்களை உணர்வு ரீதியாக “ உடன் பிறப்பே..” என அழைக்க.. அதிமுகவை நிர்மாணித்த தலைவரான மறைந்த எம்ஜிஆர் தனது தொண்டர்களை “ ரத்தத்தின் ரத்தமே” அழைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது இறுதி காலம் வரை ” உடன்பிறப்பே” என தலைப்பிட்டு முரசொலியில் தனது தொண்டர்களுக்கு எழுதினார். அதனை படிப்பதற்காக கடைகோடி கிராமம் முதல் நகரம் வரை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த நிக்ழ்வுகள் தமிழ்நாட்டில் ஏராளம் நிகழ்ந்துள்ளன.
இந்த வரிசையில் தனது ரசிகர்களை அழைக்க தொடர்ந்து பல வருடங்களாக ஒற்றைச் சொற்றொடரை வைத்து அழைத்து வருகிறார். உடன் பிறப்பே , ரத்தத்தின் ரத்தமே வரிசையில் அரசியல் சொற்றொடராக தற்போது என் நெஞ்சில் குடியிருக்கும் என்கிற வார்த்தை மாறியிருக்கிறது.
சினிமாவில் அரசியல் டயலாக்..!!!
பொதுவாகவே அரசியலுக்கு யார் யாரெல்லாம் வர நினைக்கிறார்களோ அவர்கள் தங்களது துறை ரீதியான வாய்ப்பை பயன்படுத்தி அரசியல் கருத்துக்களை அவ்வபோது தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய முன்னாள் முதல்வர் கருணாநிதியும், என்.டி,ராமாராவும் தங்களது துறையான சினிமாவை பயன்படுத்தி அரசியல் கருத்துக்களை மக்களிடம் முன்வைத்தனர். அவை மக்களிடம் எடுபட்டதன் விளைவாகவே ஆட்சியை பிடித்தனர்.
அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் தொடர்ந்து தனது சினிமாவின் மூலம் அரசியல் டயலாக்கை பேசி வருகின்றார். மெர்சல், சர்கார், வாரிசு என அரசியல் டயலாக இல்லாத படங்களே இல்லை எனும் சொல்லும் அளவுக்கு பல அரசியல் வசனங்களை அவர் பேசியுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளில் களத்தில் நின்ற விஜய் :
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழ்நாடே பெரும் போராட்டத்தை நடத்தியபோது களத்தில் ஆதரவு தெரிவித்து மெரினா கடற்கரையில் பங்கெடுத்தார் நடிகர் விஜய். அதேபோல நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட போராட்டம் நடத்தி தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஆகியோரது வீட்டிற்கே சென்று குடும்பத்தினரை சந்தித்தார். அதேபோல பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசிய விஜய் “ 20% பணக்காரர்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை கைப்பற்ற 80% மக்களுக்கும் சேர்த்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம்” என தெரிவித்திருந்தார்.
மக்கள் இயக்கத்தை கட்டமைத்த “ஜோசப் விஜய்” :
மெர்சல் படத்தின் வசனங்களுக்காக பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினரால ஜோசப் விஜய் என அழைக்கபட்டு பெரும் சர்ச்சையை எதிர்கொண்ட நடிகர் விஜய் பிறகு தனது அடுத்த மேடைகளில் ஜோசப் விஜய் என்ற வார்த்தையயே பயன்படுத்தி பதிலடி கொடுத்து அதனை அரசியல் காய் நகர்த்தலுக்கு திருப்பி விட்டார்.
தனது ரசிகர் மன்றங்களை ஆரம்ப கட்டங்களில் இருந்தே வலுவாக கட்டமைத்த நடிகர் விஜய் அதனை சமூக சேவை அமைப்புகளாக மாற்றி ரசிகர்களை தீவிரமாக மக்களை சந்திக்க செய்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அதிமுகவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிமுகவிற்கு ஆதரவளித்தனர்.
கடந்த கால தேர்தல்களில் தனது மக்கள் இயக்கத்தின் கொடியை அறிமுகம் செய்து தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்கு சதவிகிதத்தை பெற்றனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர்.
மக்கள் தலைவர்களுக்கு மரியாதை அளிக்க சொன்ன விஜய் :
தனது மக்கள் இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள் வெறுமனே சமூக சேவைகளில் மட்டும் ஈடுபட்டு தேங்கி நிற்காமல் மக்கள் தலைவர்களாக மறைந்தவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்யவும், மக்கள் நல பணிகளை முன்னெடுக்கவும் நடிகர் விஜய் உத்தரவிட்டார்.
விஜய்யின் உத்தரவின்படி அம்பேத்கர், தீரன் சின்னமலை, பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு மக்கள் இயக்கத்தினர் பெரும் பட்டாளங்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அடுத்த தலைமுறை வாக்காளர்களை முதன்முறையாக நேரில் சந்தித்த் விஜய் :
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை நேரில் சந்தித்த விஜய் அவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி ஊக்குவித்ததோடு மாணவர்கள் மத்தியில் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். வந்திருந்த மாணவர்கள் அனைவரும் இன்னும் 1 அல்லது மூன்று வருடங்களில் இளம் தலைமுறை வாக்காளர்களாக மாறக் கூடியவர்கள் என்பதை விஜய் நிச்சயம் அறிந்திருப்பார்.
இந்த அரசியல் கணக்கை மையமாக வைத்து மாணவர்களிடம் பேசிய விஜய் “வாக்களிக்கும்போது பணம் வாங்கக் கூடாது, பொய் செய்திகளை ஆராயாமல் பரப்பாதீர்கள், அம்பேத்கர், பெரியார், காமராஜரை வாசியுங்கள், வாக்கு என்பது உங்கள் கையில் உள்ளது அதை உங்கள் கையை கொண்டே உங்கள் கண்ணை குத்திக் கொள்ளாதீர்கள்” என அடுத்தடுத்த வசனங்களை பேசி மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யிடம் எனது வாக்கினை தகுதியானதாக மாற்ற நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் அண்ணா என கோரிக்கை விடுத்தது நிகழ்ச்சியில் பங்கேற்போரை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாக மாறிப்போன விஜய்யின் அரசியல் கனவுகள் பலிக்குமா..? அரசியல் தான் விதைத்ததை அறுவடை செய்வாரா..? திமுக, அதிமுக, தேமுதிக, மநீம போன்ற சினிமா பாரம்பரியத்திலிருந்து வந்த கட்சிகளில் விஜய் அந்த இடத்தை தக்க வைப்பாரா..? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– ச.அகமது, நியூஸ் 7 தமிழ்







