பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ராஜினாமா

பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து கடந்த…

பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து கடந்த 10ம் தேதி மீண்டும் முதலமைச்சரானார். அவரோடு, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் துணைத் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

அதன் பிறகு கடந்த 16ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

கூட்டணியின் மிகப் பெரிய கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 16 பேர், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 11 பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஒருவர், சுயேட்சை எம்எல்ஏ ஒருவர் என மொத்தம் 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டுள்ளார். சுகாதாரம், சாலை மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், வீட்டுவசதி மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் ஆகிய முக்கிய துறைகள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்க்கு அளிக்கப்பட்டுள்ளன.

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்க்கு சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஆளும் கூட்டணி 164 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இக்கூட்டணி தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் இன்று நிரூபிக்க உள்ளது.

முன்னதாக, அம்மாநில சபாநாயகராக இருந்த பாஜகவைச் சேர்ந்த விஜய் குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நரேந்திர நாராயண் யாதவ் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அதன் பிறகு மெகா கூட்டணி தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.