தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று நடிகர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடித்த ராமகிருஷ்ணன் நடித்துள்ளார். துணை இயக்குநராக இருந்த இவர் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
“தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய்தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாளை வேறு யாராவது இருப்பார்கள். இங்கு எதுவும் நிரந்தரமில்லை. லியோவில் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எனது ரசிகர் என்று கூறினார். எனக்கு மிக்க மகிழ்ச்சி.
லியோ படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும். வேற லெவலில் உருவாகி வருகிறது. படத்தில் சுமார் 20 நிமிஷம் நான் இடம்பெறுவேன் என நினைக்கிறேன். படத்தில் தொழிற்சாலையில் உருவாகியிருக்கும் ஒரு சண்டைக் காட்சி சிங்கிள் ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். அற்புதமாக உருவாகியிருக்கிறது லியோ.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







