தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் விஜய், அஜித் நடித்த படங்கள் நீண்ட இடைவெளிக்கு பின் நேருக்கு நேர் மோத உள்ளன. 8 ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ள இந்த மோதல் கோலிவுட்டில் பரபரப்பை கூட்டியுள்ளது.
தொடர் விடுமுறை நாட்களுடன் வரும் பொங்கல் பண்டிகை வழக்கமாகவே திரையரங்குகளின் வசூலையும் பொங்க விடும். வரும் பொங்கலுக்கு அஜித், விஜய் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதால் அவர்களின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்களில் எந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்பதில் தொடங்கி, பல்வேறு சூடான விவாதங்கள் இருபடங்களை சுற்றியும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதற்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய், அஜித் படங்கள் எத்தனைமுறை நேருக்கு நேர் மோதியுள்ளன என்கிற விபரங்களைப் பார்ப்போம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1) கோயம்புத்தூர் மாப்ளே- வான்மதி
விஜய், அஜித் படங்களின் முதல் பொங்கல் மோதல் 1996ம் ஆண்டுதான் தொடங்கியது. 1992ம் ஆண்டு வெளிவந்த நாளைய தீர்ப்பு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜய் ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த நிலையில் அதிலிருந்து சற்று மாறுபட்டு முதன் முதலாக ரொமான்டிக்-காமெடி படம் ஒன்றில் நடித்தார். அதுதான் ”கோயமுத்தூர் மாப்ளே”. இப்படத்தில் விஜய்யும், கவுண்டமணியும், இணைந்து அடித்த லூட்டிகளும், லொள்ளுகளும் திரையரங்குகளை சிரிப்பலையில் அதிரவிட்டன. எம்.எஸ்.வி, முரளி தயாரித்த இந்த படத்தை சி.ரங்கநாதன் இயக்கியிருந்தார்.
வான்மதி ஒரு ஆக்ஷன்- காதல்படமாக வெளிவந்தது. காதல்கோட்டை படத்தை இயக்கிய அகத்தியன் அஜித்தை வைத்து முதலில் இயக்கியப் படம் ’வான்மதி’. காதல் கோட்டை படத்தை தயாரித்த சிவசக்தி பாண்டியனே இந்த படத்தையும் தயாரித்திருந்தார். காதலும், மோதலும், கலகலப்புமாக நகரும் இந்த படம் திரையரங்குகளில் கைத்தட்டல்களை குவித்தது. 1996ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த கோயமுத்தூர் மாப்ளே, வான்மதி ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் படங்களாக அமைந்தன.
2) காலமெல்லாம் காத்திருப்பேன்- நேசம்
1996ம் ஆண்டு மட்டுமல்ல 1997ம் ஆண்டு பொங்கல் பண்டிகையும் விஜய்- அஜித் படங்களின் மோதல் களமாக அமைந்தது. விஜய் நடித்த ”காலமெல்லாம் காத்திருப்பேன்”, அஜித் நடித்த ”நேசம்” ஆகிய படங்கள் 1997ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தன. வெள்ளிவிழாப் படங்கள் பலவற்றைக் கொடுத்த ஆர்.சுந்தர்ராஜன் விஜயை வைத்து இயக்கிய படம்தான் ”காலமெல்லாம் காத்திருப்பேன்“. எம்.ஜி. பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது. உருகவைக்கும் காதல் கதையான “காலமெல்லாம் காத்திருப்பேன்” விஜய்யின் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
1997ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த அஜித்தின் “நேசம்” படத்தை கே.சுபாஷ் இயக்கியிருந்தார். ஏற்கனவே அஜித்தை வைத்து பவித்ரா படத்தை இயக்கிய கே.சுபாஷ் மீண்டும் அஜித்துடன் இணைந்த படம் ”நேசம்“. மணிவண்ணன், கவுண்டமணி உள்ளிட்டோர், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். நேசம் படம் அஜித்தின் தோல்வி படங்களில் ஒன்றாக அமைந்தது.
3) ஃப்ரண்ட்ஸ்- தீனா
90களைவிட புத்தாயிரம் ஆண்டு தொடங்கிய பிறகு 2k காலத்தில் விஜய், அஜித்தின் செல்வாக்கு தமிழகத்தில் இன்னும் விரிவடைந்திருந்த நிலையில், 2001ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் விஜய் மற்றும் அஜித் படங்கள் மீண்டும் நேருக்கு நேர் மோதின. விஜய்யின் ஃப்ரண்ட்ஸ் படமும், அஜித்தின் தீனா படமும் 2001ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒரே நேரத்தில் வெளியானது. சூர்யாவுடன் இணைந்து விஜய் நடித்த ஃப்ரண்ட்ஸ் படத்தை பிரபல மலையாள பட இயக்குனர் சித்திக் இயக்கியிருந்தார். வடிலேலுவின் திரையுலக வாழ்க்கையில் அவரது ஹைலைட் காமெடிகளில் ஃப்ரண்ட்ஸ் படகாமெடியும் ஒன்றாக. அமைந்தது. அப்பச்சன் தயாரித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட், காதல் என எல்லாம் கலந்த பொழுதுபோக்குசித்திரமாக அமைந்தது.
அஜித்குமாரின் திரையுலக வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த படம் தீனா. அவரோடு ”தல“ என்கிற அடைமொழி சேர்ந்தது இந்த படத்திலிருந்துதான். அஜித்தை ஒரு மாஸ் ஹீரோவாக இந்த படத்தின் மூலம் கொண்டு சென்றார் ஏ.ஆர்.முருகதாஸ். பி.கார்த்திகேயன் தயாரித்த இந்த படத்தின்மூலம்தான் இயக்குனராக அறிமுகமானார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படத்தில் அஜித் பேசிய வசனங்கள் திரையரங்குகளை தெறிக்கவிட்டன. ஃப்ரண்ட்ஸ் மற்றும் தீனா ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களாக அமைந்தன.
4) ஆதி-பரமசிவன்
விஜய் மற்றும் அஜித்தின் மற்றொரு பொங்கல் மோதல் ஆதி- பரமசிவன் படங்களின் வெளியீட்டின்போது அமைந்தது. விஜயை வைத்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்த படங்களில் ஒன்றுதான் ”ஆதி”. திருமலை என்கிற வெற்றிப்படத்தை விஜயை வைத்து கொடுத்த இயக்குனர் ரமணா மீண்டும் அவரை வைத்து ஆதி படத்தை இயக்கியிருந்தார். பழிவாங்கல் பின்னணியை கொண்ட அதிரடி ஆக்ஷன்படமாக அமைந்திருந்தது ஆதி. விஜயுடன் இந்த படத்தில் திரிஷா ஜோடியாக நடித்திருந்தார். பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஆதி படம் விஜய்யின் தோல்வி படங்களில் ஒன்றாக அமைந்தது.
ரஜினி நடிப்பில் சந்திரமுகி என்கிற இன்ட்ஸ்ரி ஹிட்டை கொடுத்து தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரத் தொடங்கிய பி.வாசு சந்திரமுகி படத்திற்கு பின் அஜித்தை வைத்து பரமசிவன் படத்தை இயக்கியிருந்தார். தீனா படத்திற்கு பின்னர் அஜித்துடன் இந்த படத்தில் லைலா ஜோடியாக சேர்ந்திருந்தார். ஒரு தூக்கு தண்டனை கைதியை தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான ஆபரேஷனுக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் பயன்படுத்தும் கதையம்சம் கொண்ட படம்தான் பரமசிவன். அஜித் தனது உடலை பெருமளவு குறைத்து தோற்றத்தில் திடீரென பெருமளவு மாற்றத்தை காண்பித்து இந்த படத்தில் நடித்திருந்தார். படம் சுமாரான வெற்றியை பெற்றது.
5) போக்கிரி- ஆழ்வார்
2007ம் ஆண்டு மீண்டும் பொங்கல் களத்தில் விஜய்- அஜித் படங்கள் மோதின. விஜய்யின் போக்கிரி, அஜித்தின் ஆழ்வார் என அந்த பொங்கலின்போது விஜய், அஜித் ரசிகர்களால் திரையரங்குகள் களைகட்டின. பிரபுதேவா இயக்கத்தில் வெளியான போக்கிரி அதிரடி ஆக்ஷன் படமாக அமைந்தது. மிரட்டும் வில்லன்கள், அவர்களை விரட்டும் விஜய் என விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட போக்கிரி படம் அந்த வருடத்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.
போக்கிரி படத்துடன் அஜித்தின் ”ஆழ்வார்” படமும் வெளிவந்தது. போக்கிரி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த அசின்தான் ஆழ்வார் படத்தில் அஜித்திற்கும் ஜோடியாக நடித்திருந்தார். விவேக், லால், ஆதித்யா ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 80களில் பழிவாங்கும் கதையம்சங்கள் கொண்ட படங்கள் பெரிய வெற்றிகளை பெற்றுவந்தன. ஆனால் 2k காலத்தில் இது ஒரு பழைய பாணியாக இருந்ததால், பழிவாங்கும் கதையம்சம் கொண்ட ஆழ்வார் படம் ஒரு தோல்விப் படமாக அமைந்தது.
6) ஜில்லா- வீரம்
2007ம் ஆண்டு பொங்கலுக்கு பின்னர் அடுத்த 6 வருடங்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது, விஜய்- அஜித் படங்கள் மோதவில்லை. இந்நிலையில் மீண்டும் 2014ம் ஆண்டு ஜில்லா-வீரம் படத்தின் மூலம் இந்த மோதல் அமைந்தது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் விஜய் இணைந்து நடித்த படமான ஜில்லாவிலும் போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் நடித்திருப்பார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி விஜயை வைத்து மீண்டும் தயாரித்த இந்த படத்தை ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். மாஸான காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள் என விஜய் தனது ரசிகர்கள் தன்னிடம் எதிர்பார்ப்பதை ஜில்லாவில் சிறப்பாக கொடுத்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் இந்த படத்தில் நடித்திருந்தார்.
ஜில்லா அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்த நிலையில் அந்த படத்துடன் போட்டி போட்ட அஜித்தின் வீரம் படம் குடும்ப சென்டிமெண்டும் ஆக்ஷனும் கலந்த கதையம்சம் கொண்ட படமாக அமைந்தது. அஜித்துடன் தொடர்ச்சியாக 4 படங்களில் இணைந்து பணியாற்றிய சிவா முதன்முதலாக அஜித்தை வைத்து இயக்கிய படம்தான் வீரம். 4 தம்பிகளுக்கு அண்ணனாக சென்டிமெண்ட் காட்சிகளில் கலங்க வைத்த அஜித், அதே நேரம் அதிரடி காட்சிகளிலும் அசத்தியிருந்தார். ஜில்லா, வீரம், என இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்திருந்தாலும், ஜில்லாவைவிட வீரம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
ஜில்லா-வீரம் படத்திற்கு பின் விஜய், அஜித் திரைப்படங்கள் எந்த ஒரு தருணத்திலும் ஒரே நேரத்தில் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது 8 வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நேருக்கு நேர் மோத உள்ளன. கடந்த கால பொங்கல் வெளியீடுகளில் அஜித், விஜய் திரைப்படங்கள் நேருக்குநேர் மோதியபோது இருவருக்கும் வெற்றி விகிதங்கள் கிட்டதட்ட சம அளவில்தான் இருந்தன. வரும் பொங்கல் பண்டிகைக்கு விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் வெளியாக உள்ளது. இரண்டு படங்களும் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில் எந்தபடம் அதிக வசூலையும், அதிக பாராட்டுக்களையும் பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-எஸ்.இலட்சுமணன்