விஜய் Action Plan: 2026 தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டி… களமிறங்கிய வியூக வகுப்பு நிறுவனம்…

வாக்காளர்கள் விபரம் சேகரிப்பு, நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு பாராட்டு, நிர்வாகிகள் சந்திப்பு, பயிலகம் தொடக்கம் என அனைத்திலும் 234 தொகுதிகளையும் குறி வைத்து களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம். இதன் பின்னால் உள்ள அரசியல்…

வாக்காளர்கள் விபரம் சேகரிப்பு, நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு பாராட்டு, நிர்வாகிகள் சந்திப்பு, பயிலகம் தொடக்கம் என அனைத்திலும் 234 தொகுதிகளையும் குறி வைத்து களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம். இதன் பின்னால் உள்ள அரசியல் வியூகம் என்ன ? விரிவாக பார்க்கலாம்…

வெற்றி என்கிற படத்தில் 1984ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக, தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரால் திரையுலகிற்கு அறிமுகமான விஜய். அவர், 1992ல் எஸ்.ஏ.சி இயக்கிய நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் ஹீரோவானார். தொடர்ந்து படங்களை இயக்கி, ரசிகர் மன்றங்கள், இளைய தளபதி பட்டம், மக்கள் இயக்கமாக மாற்றப்பட்ட ரசிகர் மன்றம் என மகனுக்கு ஒரு அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தார் தந்தை எஸ்.ஏ.சி. இளையதளபதியாக இருந்தவர் மெர்சல் படத்தில் இருந்து தளபதி என்றும் தற்போது தலைவா… என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் விஜய்.

எகிறும் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள விஜயின் கவனம் அரசியலை நோக்கி திரும்பியுள்ளது என்று கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது செயல்பாடுகள் இருப்பதை பார்க்கவும் முடிகிறது. ’’ஆமாங்க…அரசியலுக்கு வரப்போறேன்னு…. ’’ தற்போது வரை விஜய் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், திரைப்படங்களிலும் விழாக்களிலும் அவரது பேச்சு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டே இருக்கிறது என்கிறார்கள்.
குறிப்பாக, ‘’கல்விதான் அழியாத செல்வம். நீங்கதான் நாளைய வாக்காளர்கள். நல்ல தலைவர்களை நீங்கதான் தேர்ந்தெடுக்கப் போறீங்க… பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது, நமது கையால், நமது கண்ணையே குத்துவது போல். அம்பேத்கர், பெரியார், காமராஜரைப் பற்றி படியுங்கள்…’’ என்று கடந்த மாதம் மாணவர்களிடம் அவர் பேசியதை குறிப்பிடுகிறார்கள்.

விஜயகாந்த் வழியில் விஜய்

திரையுலகில் நடிகர் விஜயகாந்த்திற்கு பல ஹிட் படங்களை கொடுத்தவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி, அவரது வேண்டுகோளை ஏற்று செந்தூரபாண்டி என்கிற படத்தில் விஜயின் அண்ணனாக நடித்தார் விஜயகாந்த். இந்த படத்தின் வெற்றி விஜயின் திரையுலக வாழ்விற்கு பெரும் உதவியாகவும் அமைந்தது. அந்த அண்ணனின் வழியை அரசியலிலும் பின்பற்றுகிறார் விஜய் என்கிறார்கள்.

இதன்படி, கிராமவாரியாக விஜயகாந்த் ரசிகர் மன்றங்களை அமைத்தது போல், விஜய் மக்கள் இயக்கத்தை தொகுதிவாரியாக வலுப்படுத்தி, தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர். படிப்படியாக மக்கள் இயக்க நிர்வாகிகளை அரசியலுக்கு தயார்படுத்தியும் வருகிறார் என்கிறார்கள்.

ரசிகர்களுக்கு பச்சைக்கொடி

விஜய் மக்கள் இயக்கத்திற்கு மாவட்டவாரியாக மட்டுமின்றி, இளைஞரணி, தொழிலாளர் அணி என அரசியல் கட்சிகள் போல அணிவாரியாகவும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஊரக உள்ளாட்சி அதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்டவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து விஜய் பாராட்டியும் உள்ளார். இதையே தங்களுக்கான க்ரீன் சிக்னலாக பார்க்கிறார்கள் மக்கள் இயக்கத்தினர்.

வியூகம் வகுக்கும் நிறுவனம் – களமிறங்கும் நிர்வாகிகள்

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக புள்ளி விவரங்களை சேகரித்து, தீவிர உறுப்பினர் சேர்க்கை, சட்டமேதை அம்பேத்கர், விடுதலைப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை பிறந்த நாளின் போது அவர்களது fசிலைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை, கடந்த மே 28ம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, ஒரு நாள் மதிய உணவு, இதைத் தொடர்ந்து ஜூன் 17ம் தேதி 10, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சந்திப்பு, ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில் மாலை நேர படிப்பகம் என அனைத்தும் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக நடைபெற்று வருகின்றன.

இவை எல்லாம் அரசியலை நோக்கிய திட்டமிட்ட நிகழ்வுகள்தான். அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்து தரும் முக்கிய நிறுவனம் ஒன்று, விஜய்க்காக களமிறங்கியுள்ளது. தொகுதிவாரியாக விபரங்களையும் சேகரித்துள்ளனர். அவர்கள் வகுத்து தரும் திட்டங்களை, மக்கள் இயக்க நிர்வாகிகள் அடுத்தடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். அப்ப அடுத்த திட்டம் என்னன்னு ? நீங்க கேட்கலாம்.

அடுத்த திட்டம்?

விஜயின் இலக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான். அதை நோக்கி, மெல்ல காய் நகர்த்தி வருகிறார். 2024 மக்களவைத் தேர்தல் முடிவிற்கு பிறகு இன்னும் வேகமெடுப்பார். அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் உள்ளார். இளம் தலைமுறையினர், அவர்கள் மூலம் பெற்றோரையும் குறி வைக்கும் அவர், 234 தொகுதிகளுக்கு நீண்ட பயணம், மக்கள் சந்திப்பும் மேற்கொள்ளும் திட்டமும் உள்ளதாக சொல்கிறார்கள். இது மட்டுமல்ல இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கு என்கிறார்கள்… அவற்றை அடுத்தடுத்த நாட்களில் பார்க்கலாம்….

இந்த செய்தியை காணொளியாக காண:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.