குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அரசியல் சாசன பதவியாகக் கருதப்படுகிறது குடியரசு துணை தலைவர் பதவி. அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாநிலங்களவையின் தலைவராகவும் இருப்பார்கள்.
தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்தமாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ந்தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தற்போது மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வரும் ஜெகதீப் தாங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இதனை அறிவித்துள்ளார். பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரசின் தலைவருமான அமிரீந்தர் சிங், முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முக்தர் அப்பாஸ் நக்வி என பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் பாஜக கூட்டணியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
71 வயதான ஜெகதீப் தாங்கர் ராஜ,ஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ளார். மக்களவை உறுப்பினர், ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்து அரசியல் அனுபவம் பெற்றவர் ஜெகதீப் தாங்கர்







