உலக நாடுகளுக்கு, இந்தியா வழிகாட்டியாக திகழ்வதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாட்டை, ஆளுநர் ஆர்.என் ரவி துவக்கி வைத்தார். புதிய உலகை கட்டமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் 2047ம் ஆண்டில் உலகை வழிநடத்தும் இந்தியா எனும் தலைப்பில் இந்த மாநாடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க 31 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 28 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர். என். ரவி, வரும் 2047ம் ஆண்டில், நாடு சுதந்திர தின நூற்றாண்டு விழாவை கொண்டாட இருப்பதை சுட்டிக்காட்டினார். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்போது, உலகை வழிநடத்தும் நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் எனும் நோக்கில், அதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கல்விதான் இதற்கு முக்கிய பங்காற்ற உள்ளது என குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இதற்கு ஏற்ப கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியதும், கல்வியில் மாற்றத்தை கொண்டுவருவதும் மிகவும் முக்கியம் என ஆளுநர் கூறினார். மாறி வரும் உலக சூழலுக்கு ஏற்ப, நமது மாணவர்கள் பன்முகத் திறமை கொண்டவர்களாக திகழ வேண்டும் என்றும், அவர்களே நமது சமுதாயத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.







