கேரள அரசியலில் ’இரும்புப் பெண்மணி’ என்று வர்ணிக்கப்படும் கே.ஆர்.கவுரி அம்மா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர் கே.ஆர்.கவுரி அம்மா. இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் 1957ஆம் ஆண்டு உருவான முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் இவர். வயது மூப்பு காரணமாக, உடல்நலக் குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் இன்று காலமானார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பட்டணக்காடு என்ற கிராமத்தில், 1919ஆம் ஆண்டு பிறந்தவர் கவுரி அம்மா. இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் நிறைந்தவரான இவர், திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். 1952 மற்றும் 1954 ஆண்டுகளில் திருவிதாங்கூர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கேரள அரசியலில் ’இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் கவுரி அம்மா, வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது, நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தி னார். இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் மறைந்த டி.வி.தாமஸை திருமணம் செய்து கொண்ட இவர், 1964ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டபோது, கணவர் சார்ந்திருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் செல்லாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தொடர்ந்தார்.
1994ஆம் ஆண்டு, ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி (மக்களாட்சிப் பாதுகாப்புப் பேரவை- ஜேஎஸ்எஸ்) எனும் கட்சியைத் தொடங்கினார். 2016ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் இடதுசாரி அணியில், ஜேஎஸ்எஸ் கட்சி இணைந்தது.
கவுரி அம்மா மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் முகமது ஆரிஃப்கான் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
…………..







