கட்டுரைகள் தமிழகம்

அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி!


ராணி கார்த்திக்

கட்டுரையாளர்

வேலூர் மாவட்டம் லத்தேரியைச் சேர்ந்தவர் வித்யாலட்சுமி. படிப்பை முடித்து ஆசை ஆசையாக காதலித்து, வீட்டார் சம்மதத்துடன் காதலித்தவரையே கரம் பிடித்து மகிழ்ச்சியாக திருமண வாழ்வை தொடங்கியுள்ளார். இந்த இல்லற வாழ்க்கையின் சாட்சியாக தனுஷ், தேஜஸ் என இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். ஏனோ திருமணமான ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மென்பொருள் பொறியாளரான தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெறுகிறார் வித்யா.

இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் வித்யா விவாகரத்து செய்யும் முடிவை எடுக்கக் காரணம் அவரது மன உறுதி மட்டுமல்ல…. ”நான் இருக்கிறேன் மகளே உனக்கு” என்று வித்யாவின் அப்பா மோகன் ரெட்டி கொடுத்த நம்பிக்கையும்தான். அப்பா வீட்டிற்கு வந்தது முதல் வித்யா தனது அம்மாவுடனும் குழந்தைகளுடனும் துயரப்படுவதற்கு எந்த சிறிய காரணமும் இன்றி எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளார்.

வித்யாவின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் நிரந்தரமாகப் பறித்துக் கொண்டது அந்த ஞாயிற்றுக்கிழமை….

கடந்த 18 ஆம் தேதி பேரப்பிள்ளைகளை செல்லம் கொஞ்சி விளையாட வேண்டி லத்தேரியில் உள்ள தனது பட்டாசுக் கடைக்கு அழைத்துச் செல்கிறார் மோகன் ரெட்டி. கோடைக்காலம் என்பதால் பேரக்குழந்தைகளுக்கு நுங்கு வாங்கித் தந்து சாப்பிடச் சொல்கிறார். சற்று நேரத்தில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் புதிய மாடல் பட்டாசு ஒன்றை வெடித்துக் காட்டுமாறு கூற, மோகன் ரெட்டியும் வெளியே செல்கிறார். பட்டாசை வெடிக்கும் போது, அதிலிருந்து ஒரே ஒரு சிறிய தீப்பொறி கடைக்குள் விழுகிறது.

அடுத்த நொடியே பட்டாசுகள் வெடிக்கத் தொடங்க, பேரக்குழந்தைகளை வெளியே வரச் சொல்லிக் கத்துகிறார் மோகன் ரெட்டி. ஆனால் விவரமறியாத தனுஷூம், தேஜசும் பயந்து போய் பட்டாசு குடோனுக்குள் ஓடுகின்றனர். குழந்தைகளை காப்பாற்றுவதற்காக கடையின் பின்பக்கம் உள்ள குடோனுக்கு விரைந்த மோகன் ரெட்டியும் குழந்தைகளுடன் சிக்கிக் கொள்ள சில நிமிடங்களுக்கு முன் தன் பேரக்குழந்தைகளின் உடல் சூட்டைத் தணிக்க நினைத்த மோகன் ரெட்டி குழந்தைகளுடன் சேர்ந்து கருகிக் கிடந்தார்.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட நொடியே வித்யா பேதலித்துப் போனார். குழந்தைகள் அப்பா என மூன்று உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வந்த போது, வித்யா அலறவோ… கத்தவோ… யாரிடமும் பேசவோ இல்லை. மௌனமாக அழுது கொண்டே இருந்தார். அடுத்த நாள் நடந்த இறுதிச் சடங்கு வரை அப்படியே இருந்த அவர் அன்று இரவு திடீரென தூக்கு மாட்டிக் கொண்டார்.

கதவை உடைத்துக் காப்பாற்றிய உறவினர்களும், வித்யாவின் தங்கை திவ்யாவும் உனக்கு இனி நாங்கள் இருக்கிறோம் என நம்பிக்கை கொடுத்து தேற்றியுள்ளனர். ஆனால், யார் சொல்வதையும் கேட்கும் மனநிலையில் வித்யா இல்லை. முதல் நாள் தூக்கு மாட்டிக் கொண்டவர் அன்றைய தினமோ யாருமில்லா நேரத்தில் தனது கை நரம்பை அறுத்துக் கொண்டுள்ளார். தன் குழந்தைகள் சென்ற இடத்திற்கே தானும் செல்ல வேண்டும் என்பது மட்டுமே அவர் மனதில் இருந்தது. அப்போதும் அவரை மருத்துமனையில் சேர்த்த உறவினர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

இதற்குப் பின் வித்யாவை விட்டு இமைப் பொழுதும் பிரியாது ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டார் அவரது தங்கை திவ்யா. அப்படி இருந்தும் நேற்றைய தினம் வீட்டிலிருந்து வெளியேறிய வித்யா நள்ளிரவு ரயில் முன் பாய்ந்தார். இறுதியாக, வாழ்வுக்கும் சாவுக்குமான வித்யாவின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

என்னதான் உறவினர்களின் அக்கறை இருந்தாலும் ஒரு மன நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று தகுந்த கவுன்சிலிங் கொடுத்திருந்தால் வித்யாவைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் மன நல மருத்துவரிடம் செல்பவர்கள் அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் நம் சமூகத்தில் இருக்கும் வரை வித்யாக்களின் தற்கொலைகளுக்கு நாமும் ஏதோ ஒரு வகையில் காரணம் என்பதே நம் முகத்தில் அறையும் உண்மை.., அதே நேரம் மன நல மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அரசும் ஈடுபட வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாகவே உள்ளது.

Advertisement:

Related posts

“எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி” – பிரேமலதா விஜயகாந்த

Jayapriya

4 வயது குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு கிடைத்த தண்டனை?

Gayathri Venkatesan

கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள்!

Karthick