வேளாங்கண்ணி பேராலயத்தின் இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து ஆண்டு பெருவிழா நடைபெறும். செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மாதாவின் பிறந்த நாள்
விழாவாக கொண்டாடப்படும். பசலிக்கா அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித பேராலயம், கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது.
இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக, புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலம் நடைபெற்றது. பேராலயத்தில் இருந்து தொடங்கிய கொடி ஊர்வலமானது, லட்சக்கணக்கான பக்தர்கள் இடையில் கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத்தெரு வழியாக மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் ஊர்வலமாக சென்று மீண்டும் பேராலய முகத்திற்கு எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து, தஞ்சை முன்னாள் ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் எல்.சகாயராஜ் ஆகியோர் தலைமையில், பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளை நடத்தி கொடியைப் புனிதம் செய்வித்தனர். மாலை 6.40 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடி ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாதா வாழ்த்து பாடலுடன் வானவேடிக்கை மிளிர கொடியானது கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது ஆவே மரியே… மரியே வாழ்க என பக்தர்கள் வாழ்த்து பிரார்த்தனை செய்தனர். முக்கிய நிகழ்வான வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ம் தேதியும் அதனைத் தொடர்ந்து மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8-ஆம் தேதி சிறப்பு திருப்பலி பேராலயத்தில் நடைபெற உள்ளது.







