சித்தராமைய்யா பிரதமர் ஆக வேண்டும்- திருமாவளவன்

சித்தராமைய்யா பிரதமராகினால் நாட்டில் எந்த காலத்திலும் சனாதன சக்திகள் தலைதூக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்  தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பல்வேறுதுறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் விருது வழங்கும் விழா,…

சித்தராமைய்யா பிரதமராகினால் நாட்டில் எந்த காலத்திலும் சனாதன சக்திகள் தலைதூக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்  தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பல்வேறுதுறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு  அக்கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன்,நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, டெல்லி மாநில அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமைய்யாவிற்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. பெரியார் ஒளி விருது – எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கும், காமராஜர் கதிர் விருது – விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசத்திற்கும் வழங்கப்பட்டன. அயோத்திதாசர் ஆதவன் விருதை முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி செல்லப்பன் பெற்றார். காயிதேமில்லத் பிறை விருது  எஸ்.டி.பி.ஐ. தேசிய துணை தலைவர் தெகலான் பாகவிக்கு வழங்கப்பட்டது. செம்மொழி ஞாயிறு விருதை தொல்லியல் அறிஞர் இராசன் பெற்றார். மார்க்ஸ் மாமணி விருது மறைந்த எழுத்தாளர் ஜவஹருக்கு வழங்கப்பட்டது.

விழாவில் பேசி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ‘‘நாட்டில் 90% மக்கள் அடிமையாகவே உள்ளார்கள்.காங்கிரசை கொண்டு தான், காங்கிரசை இணைத்து தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்றார்.ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஹிட்லர், ராஜபக்சே கொள்கை அதே கொள்கை தான் ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்றும் அவர் விமர்சித்தார். திருமாவளவன் காங்கிரஸ் உடன் ஒட்டிக் கொள்ள பார்க்கிறார் என்று விமர்சிப்பவர்கள் பற்றி தான் கவலைப்படவில்லை என்று கூறிய திருமாவளவன்,நமக்கு வேறு வழியில்லை சனாதன சக்திகளை வீழ்த்த வேண்டுமென்றால் தேசிய அளவில் காங்கிரஸ் உடன் கை கோர்க்க வேண்டும் என்றார். பாஜக உள்ளிட்ட சங்க பரிவார அமைப்புகளின் உண்மையான எதிரி அம்பேத்கர் மற்றும் அவர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டம் என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்,பாஜக சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல இந்து மக்களுக்கும் எதிரானவர்கள் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆபத்து என்றும் தெரிவித்தார்.

சனாதன சக்திகளை தூக்கி எறிய சித்தராமையா போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் தேவை என்றும் சமுத்துவ சமூக நீதி கொள்கை பார்வை  சித்தராமையாவிடம் உள்ளது என்றும் கூறிய திருமாவளவன், சித்தராமையா ஏன் இந்தியாவின் பிரதமராக வர கூடாது, என அவர் மேடையில் பேசியகொண்டிருந்த போது தனக்கு தோன்றியதாக தெரிவித்தார். அப்படி அவர் பிரதமராக வந்தால், எந்த காலத்திலும் சனாதன சக்திகள் தலை தூக்க முடியாது – என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்

நிகழச்சியில் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா, மக்கள் தொகை அடிப்படையில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான திட்டங்களுக்கு  பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவிடுத்தார். இட ஒதுக்கீடு பிச்சை கிடையாது என்று கூறிய சித்தராமைய்யா அது வாழ்வுரிமை, அடிப்படை உரிமை என்றார்.எவ்வளவு நாள் சாதி வேறுபாடு சாதி கட்டமைப்பு உள்ளதோ அவ்வளவு நாள் இட ஒதுக்கீடு தேவை என அம்பேத்கர் கூறியுள்ளதாகவும் சித்தராமைய்யா தெரிவித்தார்.பாஜக எப்போதுமே அரசியல் சட்டத்தை மதித்ததே இல்லை  என்றும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.