சென்னை – திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை வரும் ஆகஸ்ட் 6 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிநவீன ரயிலான வந்தே பாரத் ரயிலை சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, வழியாக நெல்லைக்கு வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதனால் நெல்லை மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
16 பெட்டிகள் கொண்ட முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட 2 வந்தே பாரத் ரயில்கள் கொரானா ஊரடங்குக்கு முன் இந்தியாவில் இயக்கத்தை தொடங்கின.
முதல் வந்தே பாரத் ரயிலானது 760 கிமீ தூரம் கொண்ட டெல்லி – வாரணாசி வழித்தடத்தில் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டது. காலை 6 மணிக்கு புதுடெல்லியில் கிளம்பி கான்பூர் மற்றும் அலகாபாத் என இரு நிறுத்தங்களுடன் மதியம் 2 மணியளவில் வாரணாசி சென்றடையும். பின்பு அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு கிளம்பி இரவு 11 மணிக்கு டெல்லியை சென்றடையும். 8 மணி நேரத்தில் 760 கிலோ மீட்டரை கடக்கும் இந்த ரயிலின் சராசரி வேகம் 95 கி.மீ ஆகும்.
இரண்டாவது ரயில் டில்லியிலிருந்து ஸ்ரீமாதா வைஷ்ணவா தேவி கத்ரா வரை 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 3 முதல் தனது இயக்கத்தைத் தொடங்கியது. காலை 6 மணிக்கு டில்லியில் கிளம்பி அம்பாலா காண்ட், லூதியானா மற்றும் ஜம்முதாவி என 3 நிறுத்தங்களுடன் மதியம் 2 மணியளவில் கத்ரா சென்றடையும். பின்பு அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு கிளம்பி இரவு 11 மணிக்கு டெல்லியை சென்றடையும். 8 மணி நேரத்தில் 655 கிலோ மீட்டரை கடக்கும் இந்த ரயிலின் சராசரி வேகம் 82 கி.மீ ஆகும்.
வந்தே பாரத் ரயிலின் சிறப்புகள்:
தானியங்கி கதவுகள், தீத்தடுப்பு அலாரம், கண்காணிப்பு கேமராக்கள், சென்சாரில் இயங்கும் நீர் குழாய்கள், அகலமான ஜன்னல் கண்ணாடிகள், விமானத்தில் இருப்பதைப் போல பயணிகளின் உடமைகளை வைப்பதற்கு ரேக்குகள் உள்ளது. முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயிலில் வைஃபை வசதி, குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தும் உறிஞ்சு கழிவறைகள், பரவலான வெளிச்சத்தைத் தரும் விளக்குகள், ஜி.பி.எஸ். அடிப்படையில் இயங்கும் பயணிகள் தகவல் மையம் என பல நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்புக்காக மெட்ரோ ரயில்களை போல, ரயில் நின்ற பிறகே கதவுகள் திறக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் சிக்கலின்றி பயணிக்கும் வகையில் இந்த ரயிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தொழில் நுட்ப சிறப்புகள் :
இந்த ரயிலின் இரண்டு பக்கங்களிலும் காற்றை கிழித்து செல்லும் வகையில் விமானத்தை போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும். ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவான எல்எச்பி பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. என்ஜின்கள் இல்லாமல் மோட்டாரில் இயங்கக்கூடிய ரயில் இதுவாகும். ஒரு பெட்டி விட்டு அடுத்த பெட்டிகளின் அடியில் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.
சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களை போல இரு திசைகளிலும் இயங்கும் தன்மை கொண்டது. ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் போது மிக விரைவாகவும், ரயில் நிலையத்தில் வந்து ரயிலை உடனடியாக நிறுத்துவதற்கும் உரிய வகையில் இந்த ரயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு வந்தே பாரத் ரயில்களும் தோராயமாக 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது.
சதாப்தி விரைவு ரயிலோடு ஒப்பிடும்போது பயண நேரம் 15% குறைவாக இருக்கும்.
ரயிலில் மொத்தமுள்ள 16 பெட்டிகளில் இரண்டு உயர்வகுப்பு பெட்டிகள் உள்ளன. இவற்றில் தலா 52 இருக்கைகளும், ஏனைய பெட்டிகளில் தலா 78 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. உயர்வகுப்பு ரயில் பெட்டிகளில் 360 டிகிரியில் சுழலும் இருக்கைகள் உள்ளன.
சென்னை மதுரை நெல்லை வழித்தடம்:
660 கிமீ நீளமுள்ள சென்னை – நெல்லை இடையே முழுவதும் மின்மயமாக்கல் உடன் கூடிய இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு தேஜாஸ் ரயிலை தவிர, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, டபுள் டக்கர், ஜனசதாப்தி போன்ற எந்த வித அதிவிரைவு ரயில்களும் இல்லை என்ற குறை உள்ளது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று நியூஸ்7 தமிழ் பொது மக்களின் கோரிக்கையை செய்தியாக வெளியிட்ட நிலையில் அது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் நியூஸ்7 தமிழுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று பிரத்தியேகமாக பேட்டி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது
வந்தே பாரத் ரயில் பராமரிப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு முடிந்த நிலையில் வருகின்ற ஆறாம் தேதி முதல் வந்தே பாரத் துறையில் சேவை தொடங்குகிறது.
ஆன்மிக ஸ்தலங்களை இணைத்தல்:
மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், நெல்லையப்பர் கோயில், கன்னியாகுமரி அம்மன் கோவில் மற்றும் தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் அமைந்துள்ள பல்வேறு கோயில்களுக்கு செல்வதற்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயில் காலை 6:00 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு 8 மணி நேரத்தில் மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும் வகையிலும், மதியம் 2.40 மணிக்கு சென்னையில் புறப்பட்டு 10.40 மணிக்கு நெல்லை வந்தடையும் வகையிலும் அட்டவணை அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.







