காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டிய அப்தாப் பூனாவல்லா இன்று விசாரணைக்காக கொண்டுவரப்பட்டபோது போலீஸ் வேனை மறித்து அப்தாப்பை இந்து சேனா அமைப்பினர் தாக்க முயன்றனர்.
டெல்லியில் தன்னுடன் வசித்து வந்த காதலி ஷ்ரேத்தா வாக்கரை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீசிய அப்தாப்பின் செயல் நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரிடம் டெல்லி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் 9 மணி நேர உண்மை கண்டறியும் சோதனை முடிந்த பின்னர் அப்தாப்பை மீண்டும் சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அப்போது அந்த வேனை இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சிலர் கையில் வாள்களோடு வழிமறித்தனர்.
வேனுக்குள் இருந்த அப்தாப்பை தாக்க முயன்ற அவர்கள், அப்தாப்பை தங்களிடம் ஒப்படைக்குமாறு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேன் மீதும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்துவோம் என எச்சரித்து நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.







