வள்ளியூரில் தொழிற்பேட்டை-அமைச்சர் தா.மோ.அன்பரசன்

“தமிழக முதலமைச்சர் எல்லா மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வரும் பட்ஜெட்டில் வள்ளியூரில் தொழில்பேட்டை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று தமிழக குறு, சிறு…

“தமிழக முதலமைச்சர் எல்லா மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை
ஏற்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வரும்
பட்ஜெட்டில் வள்ளியூரில் தொழில்பேட்டை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்”
என்று தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்
தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நெல்லை மாவட்டம்
வள்ளியூரில் 52.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 504 வீடுகள் கட்டுவதற்காக
திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தலா 10.46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்படும் வீட்டிற்கு மத்திய அரசின் மூலம் 1.50 லட்ச ரூபாய் மானியமும்
மாநில அரசின் மூலம் 7 லட்ச ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது.

பயனாளிகள் சார்பில் 1.96 லட்ச ரூபாய் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட
இருக்கிறது. இத்திட்டத்திற்காக வள்ளியூர் நகர பஞ்சாயத்துக்குட்பட்ட தமிழ்நாடு
வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதிக்கு வடக்கு பக்கம் இடம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை தமிழக சபாநாயகர் அப்பாவு, தமிழக குறு, சிறு
மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்பு வள்ளியூரில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டை, டான்சி இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

வள்ளியூரில் இந்த இடங்களை ஆய்வு செய்து இருக்கிறோம். நிச்சயமாக தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த பகுதியில் இருக்கின்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிப்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக சபாநாயகர் வேண்டுகோளை ஏற்று அந்தப் பகுதியில் படித்த இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக ஒரு மையம் ஏற்படுத்தப்படும். வள்ளியூர் நகர பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வீடு கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 504 வீடு கட்டுவதற்கு 52.72 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

மேலும் பணகுடி நகர பஞ்சாயத்து பகுதிகளிலும் 49.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டவும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. விரைவில் அங்கும் இடங்களை கையகப்படுத்தி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. டான்சி நிறுவனமும் சிட்கோவும் இணைந்து எங்கெல்லாம் டான்சி இடங்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருக்கின்றதோ அந்த இடங்களை கையகப்படுத்தி அங்கு குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூலம் தொழில்
தொடங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வள்ளியூரில் அமைந்துள்ள 3.6 ஏக்கர் டான்சி இடத்தில் மூன்று கட்டடங்கள் உள்ளது. இங்கு தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே கடந்த பட்ஜெட்டில் மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இங்கு சிறு தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இடங்கள் பாழாக போகக் கூடாது என்ற நோக்கில் இத்திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். வள்ளியூரில் 100 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்படும். அந்த இடத்தில் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழில் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதலமைச்சர் எல்லா மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 5 தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கு உறுதியளித்து திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் வரும் ஆண்டில் ஐந்து தொழிற்சாலை அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் வள்ளியூரில் தொழிற்பேட்டை அமைக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

ஆய்வின்போது அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.