வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சியை படமாக்க, நடிகர் அஜித் மற்றும் படக்குழுவினர் ஐரோப்பா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என மோஷன் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன நிலையில், அதனை நிறைவு செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, நடிகர் அஜித் மற்றும் வில்லனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மோதும் சண்டைக்காட்சியை படமாக்க படக்குழுவினர் கிழக்கு ஐரோப்பா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 10 நாட்களில் அங்கு செல்லும் படக்குழுவினர், 7 நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.








