வைகுண்ட ஏகாதசி – திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதன்படி இன்று அதிகாலை பெருமாள் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் 108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றபடும் சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில். இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 20ம் தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. இதையடுத்து பகல் பத்து 10-ம் திருநாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதற்காக நேற்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரத்தில் புறப்பட்ட நம்பெருமாள் 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். அங்கு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் அதிகாலை 5.45 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா…கோவிந்தா..ரங்கா …. ரங்கா… என்ற முழக்கமிட்டனர். இதையொட்டி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.