திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழா கோலாகலம்!

திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மேலூருக்கு திருமறை நாதர் எழுந்தருளிய விழா நடைபெற்றது.

திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் நடைபெறும் வைகாசி பெருவிழாவின் ஒரு பகுதியாக, திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் பல்லக்கில் எழுந்தருளி மேலூருக்கு வந்து விடிய விடிய பக்தர்களுக்கு அருள்புரியும் மாங்கொட்டை திருவிழா நடைபெற்றது. மாம்பழம் அதிகமாக விளைசாலாகும் வைகாசி மாதம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கூடுவதும், அப்போது விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த மாம்பழங்களை நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் கூட்டத்தில் மாம்பழங்களை சூரை விடுவதும் வழக்கமாக உள்ளது. அந்த மாம்பழங்களை சாப்பிட்டு கீழேபோடும் மாங்கொட்டைகள் தெருக்களில் பரவலாக சிதறிகிடப்பதினால் இந்த விழாவிற்கு மாங்கொட்டைத்திருவிழா என பல நூற்றாண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது.

தாசில்தாருக்கு முதல்மரியாதை:

மேலூர் நகரின் நுழைவு வாயிலில் தாசில்தார் மண்டகப்படியில் திருமறை நாதர் வேதநாயகி அம்மன் எழுந்தருளினர். அப்போது சிவனடியாருக்கு சிவலிங்கம் பெற்று தந்த தாசில்தாருக்கு முதல் மரியாதை செய்யும் வகையில் தற்போதைய தாசில்தார் செந்தாமரையை பாரம்பரிய வழக்கப்படி தாலுகா அலுவலகத்தில் இருந்து அழைத்துவந்து பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பிறகு மேலூர் நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தார். மேலூரில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதிகள் தோறும் வளம் வந்து பக்த்தர்களுக்கு அருள்புரிந்த சுவாமி இரவில் சிவன்கோவிலில் திருமறைநாதர் சுவாமி தங்கலாகிறார். காலையில் திருவாதவூருக்கு புறப்படுகிறார். பாரம்பரிய விழாவான மாங்கோட்டைத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.