கவிஞர் வாலி நினைவு தினம் இன்று. அவர் குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்.தமிழ் சினிமாவையும் வாலியையும் அவ்வளவு எளிதில் பிரித்துப் பார்க்க முடியாது.
சீனிவாச அய்யங்காருக்கும், பொன்னம்மாளுக்கும் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மகனாக பிறந்தவர் வாலி. இவரது இயற்பெயர் டி. எஸ். ரங்கராஜன். அந்த காலத்தில் ஓவியத்தில் சிறந்து விளங்கிய மாலியை போல புகழ்பெற வேண்டும் என நினைத்தார் வாலி. அதனால் தனது பள்ளி நண்பன் பாபு-வால் வாலி என பெயர் மாற்றப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓவியராக வேண்டுமென முயற்சி செய்த வாலி, கவிஞராக உருவெடுத்தார். 1958ம் ஆண்டு, அழகர் மலைக்கள்வன் என்ற திரைப்படத்தில் நிலவும் தாரையும் நீயம்மா, இந்த உலகம் ஒருநாள் உனதம்மா என்ற பாடல் மூலமாக தமிழ் சினிமாவில் தனது முதல் பாடலை எழுதி பதிவு செய்தார். 1958 முதல் 2013 வரை 15,000 க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியவர் வாலி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களில் அதிக தத்துவ பாடல்களை எழுதியவர் வாலி தான்.
1960களில் நடிகர் நாகேஷும், வாலியும் ஒரே அறையில் வறுமையை பங்கிட்டு கொண்டு இருந்ததாக கவிஞர் வாலி பல மேடைகளில் பேசியுள்ளார். அப்போது இயக்குனர் கே பாலசந்தரை, நடிகர் நாகேஷ், வாலிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ரமணி vs ரமணி போல வாலியும், நாகேஷூம் அவ்வப்போது மோதிக்கொண்டாலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருந்தனர். வறுமை ஒருபுறம் இருந்தாலும், சாதிக்க வேண்டும் என்ற கனவு வாலியை தொடர்ந்து சினிமாவில் பாடல்கள் எழுத தூண்டியது.
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் போன்ற பாடல்களும், முஸ்தபா முஸ்தபா, காட்டுக்குயிலு மனசுக்குள்ளே போன்ற பாடல்களும் இவரது எவர்கிரீன் பாடல்களாக இன்றுவரை ஒலித்து வருகின்றன.
அதே நேரத்தில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே, தாயில்லாமல் நானில்லை, நானாக நானில்லை தாயே, சின்னத்தாயவள் தந்த ராசாவே, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம், காலையில் தினமும் கண்விழித்தால் என தாய் பாசத்தைப் பற்றி இவர் எழுதிய அனைத்து பாடல்களும் கேட்பவர் மனதில் உன்னத உணர்வை ஏற்படுத்தும் அற்புதப் பாடல்களாகவே அமைந்தன. பாடல்கள் எழுதுவதோடு நின்றுவிடாமல் பொய்க்கால் குதிரை, பார்த்தாலே பரவசம் போன்ற பல்வேறு படங்களில் தனது நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார் வாலி.
தன்னை எப்போதும் அப்டேட்டாக வைத்துக்கொள்ளும் கவிஞர் வாலி பல புதிய வார்த்தைகளை பயன்படுத்தி பாடல்கள் எழுதி அதை வெற்றிப்பெறவும் செய்துள்ளார். 2007ல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வாலிக்கு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 1973ல் வெளியான பாரத விலாஸ் திரைப்படத்தில் இந்திய நாடு என் வீடு என்ற பாடலுக்காக வாலிக்கு தேசிய விருதை கிடைத்தது. எங்கள் தங்கம், இவர்கள் வித்தியாசமானவர்கள், வருஷம் பதினாறு, அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்றத் திரைப்படங்களுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளை இவர் பெற்றுள்ளார். இவை மட்டுமின்றி, பல்வேறு விருதுகளை பெற்றவர் கவிஞர் வாலி.
கவிஞர், எழுத்தாளர், ஓவியர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட கவிஞர் வாலி, தமிழ் மீது தீராக்காதல் கொண்டிருந்தார். எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்கள் எழுதுவதே வாலியின் சிறப்பு. அப்படி எழுதப்பட்ட பாடல்கள் அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.