ட்ரோன்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை சார்பில் பாரத் ட்ரோன் மகோத்சவம் 2022 நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ட்ரோன் தொழில்நுட்பம் இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். அரசு திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேர தொழில்நுட்பங்கள்தாம் முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறிய அவர், பாதுகாப்புத் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற பல்வேறு துறைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விளைநிலங்களில் மருந்துகளை தெளிக்கப் பயன்படும் ட்ரோன் உள்பட பல்வேறு வகையான ட்ரோன்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அதேநேரத்தில் மக்களுக்கு கூடுதல் முன்னுரிமை என்பதே பிரதமர் மோடியின் கருத்து என கூறினார். அந்த வகையில் மக்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு வகையான ட்ரோன்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இத்தகைய ட்ரோன்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு, விவசாயம் என பல்வேறு துறைகள் முன்னேற்றம் காணும் என குறிப்பிட்டார்.
ட்ரோன் உற்பத்தியில் தற்போது 270 புதிய நிறுவனங்கள் இறங்கி இருப்பதாகவும், இந்த துறையின் ஆண்டு விற்று முதல் 15 ஆயிரம் கோடியாக விரைவில் உயரும் என்றும் தெரிவித்த ஜோதிராதித்ய சிந்தியா, ட்ரோன்களின் இயக்கம் தொடர்பாக தேவையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.











