பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை பல்வேறு விவகாரங்களில் பேசு பொருளாகியுள்ளது. இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதியுடன் நடத்திய நேர்காணல்…
மத்திய மாநில அரசுகளின் உறவு எப்படி இருந்தது? பிரதமர் மோடி – முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்புக்கு பிறகு மத்திய – மாநில அரசு உறவு மேம்படுமா?
நாராயணன் : அரசியல் சார்பற்று அரசு விழாக்கள் நடக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் திட்டங்கள் குறித்து பேசாமல், மொழி ரீதியான பிரச்னை, நீட் விவகாரம், ஜி.எஸ்.டி நிலுவை குறித்து பேசியிருப்பது, மத்திய அரசோடு இணக்கமான சூழலில் இருக்க விருப்பம் இல்லை என உணர்த்துவது போல் இருந்தது. மாநில அரசு மத்திய அரசோடு சுமூக உறவு கொண்டிருக்க வேண்டும். அது தான் மாநில மக்களுக்கு உதவும். முதலமைச்சரின் பேச்சு அதிருப்தியை அளிக்கிறது.
நீட், மாநில அரசு கேட்கும் நிதி விவகாரத்திலும் சரி மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு சாதகமாக பதில் அளிக்கவில்லை. இதில், திமுகவிற்கு இருக்கும் அதிருப்தியை போக்க மத்திய அரசு முயற்சி எடுக்குமா?
நாராயணன் : ஜி.எஸ்.டி விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 2021-22 – க்கான 8 மாத நிலுவைத் தொகையை மத்திய அரசு ஏற்கனவே கொடுத்துவிட்டது. ஜி.எஸ்.டி இழப்பீடு என்பது இழப்பீட்டு நிதியத்தில் இருந்து மட்டுமே அளிக்க வேண்டும் என்பது விதி. நிதியத்தில் நிலுவை இல்லாத காரணத்தால் டிசம்பர், ஜனவரி மாத நிலுவைத் தொகை பகிரப்படாமல் உள்ளது. ஆனால், உண்மைக்கு மாறாக 14,000 கோடி ரூபாயை மத்திய அரசு கொடுக்காமல் இருப்பதாக சொல்வது தவறான விஷயம்.
இதை பல முறை நிதி அமைச்சர் புள்ளிவிவரங்களோடு கூறியுள்ளார். ஆனால், உண்மைக்கு புறம்பாக தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே பொய் கூறுகிறது. மக்களை தவறாக வழிநடத்தி மத்திய அரசோடு மக்களை இணக்கமில்லாத சூழலை உருவாக்கி திமுக அரசியல் செய்கிறது. மாநில – மத்திய அரசுகள் இணைந்து கட்டமைப்பை மேம்படுத்த நடக்கும் விழாவில் வேண்டுமென்றே புறங்கூறி பேசுவது என்பது பொறுப்புள்ள அரசுக்கும், பொறுப்புள்ள முதலமைச்சருக்கும் அழகல்ல.
மாநில மக்களின் உணர்வுகளை பாஜக சரியாக புரிந்து கொள்ளவில்லை என்ற விமர்சனம் உள்ளதே. மாநில உணர்வுகளை பாஜக சரியாக புரிந்து கொள்ளவில்லையா?
நாராயணன் : பாஜகவின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ். பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள் முதலேயே நாங்கள் சொல்லி வருவது தாய் மொழிக்கல்வி. தாய் மொழியின் மூலமாக தான் கல்வி பெற வேண்டும் என்பதை நாங்கள் பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக சொல்லி வருகிறோம். இந்தி பேசும் மாநிலங்கள் தென்னிந்திய மொழிகளாக தமிழ், தெலுங்கு மொழிகளை கற்க வேண்டும் என்பதற்காகத் தான் நாங்கள் மும்மொழி கொள்கையையே ஏற்கிறோம். அதே போல, தென்னிந்தியாவில் இருப்பவர்கள் இந்தி மொழியை கற்க வேண்டும் என்பதற்காக தான் மும்மொழி கொள்கை உருவாக்கப்பட்டது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம். ஆனால், அதை அமல்படுத்தாமல் செயல்படுத்தாமல் போனதற்கு திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தான் காரணம். பாஜக தமிழை எப்போதுமே நேசித்து வருகிறது. தமிழ்மொழியின் பற்றை பிரதமர் மோடி அளவிற்கு இந்தியாவில் இருந்த பிரதமர்களோ, அகில இந்திய தலைவர்களோ வெளிப்படுத்தியது கிடையாது. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழ்மொழியின் பற்றை பிரதமர் மோடி வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார். மொழி வெறியைத் தூண்டி விட்டு திமுக அரசியல் குளிர் காய்கிறது. திமுக தனியார் பள்ளிகளை அதிகம் திறந்துவிட்டு தமிழை அழித்துக்கொண்டு தான் இருக்கிறது. தமிழ் மொழியை வளர்க்க திமுக எதுவுமே செய்யவில்லை.
பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை, நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?
நாராயணன் : பல்வேறு திட்டங்களை பிரதமர் கொடுக்கிறார். தமிழ்நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பல லட்சம் கோடிகளை ஒதுக்கியுள்ளார். நேற்று கூட 31,200கோடுக்கும் மேலான திட்டங்களை அளித்துள்ளார். தமிழ் மக்கள் மீது பிரதமர் மோடி காட்டும் அக்கறை, தமிழ் மொழி மீது பிரதர் மோடி கொண்டிருக்கும் பற்று, உன்னத இந்திய தலைவராக மோடியை நிலை நிறுத்தி உள்ளது. மோடியின் தமிழர்கள் மீதான பாசம், தேசத்தின் மீதான பற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும்.







