19 வயதிலேயே அமெரிக்க ஓபன்; வருங்கால சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னன் கார்லஸ் அல்கரஸ்

இளம் வயதிலேயே அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதுடன், உலகின் நம்பர் ஒன் வீரராக உருவெடுத்துள்ள கார்லஸ் அல்கரஸ் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம் மின்னல் வேகம், நிற்காத கால்கள், நேர்கொண்ட பார்வை,…

இளம் வயதிலேயே அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதுடன், உலகின் நம்பர் ஒன் வீரராக உருவெடுத்துள்ள கார்லஸ் அல்கரஸ் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்

மின்னல் வேகம், நிற்காத கால்கள், நேர்கொண்ட பார்வை, துல்லியமான இலக்கு என டென்னிஸ் சாம்ராஜ்ஜியத்தையே இந்த வருடத்தில் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் கார்லஸ் அல்கரஸ். 19 வயதே ஆன இளைஞர், நடப்பாண்டில் நடைபெற்ற 3 முக்கிய போட்டிகளின் பட்டங்களை வென்றுள்ளார் என்றால், இதனை வெறும் வரலாறாக மட்டுமே கவனத்தில் கொள்ள இயலாது, இதுவே வருங்காலம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.z

டென்னிஸ் விளையாட்டை பொறுத்த வரை, உலகெங்கிலும் ஒரு எலைட் ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் தனித்துவமான விளையாட்டாக தான் பார்க்கப்படுகிறது. அத்தகைய எலைட் தரத்திலான விளையாட்டில், தனக்கே உரித்தான பாணியில் விளையாடும் போது, அனைவரும் ரசிக்கும் விதத்தில் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத ஒர் விதி.

 

அவ்வாறு ரசிக்கப்படாத ஒரு வீரராக தான் முதன் முதலில் தன் பயணத்தை சர்வதேச அரங்கத்தில் தொடங்கிய இந்த இளைஞர், தற்போது அவருக்கே உரித்தான பாணியை கொண்டு விளையாடி, சர்வதேச டென்னிஸ் அரங்கில் சரித்திரம் எழுதியுள்ளார் கார்லஸ் அல்கரஸ்.

தனது குறும்புத்தனமான சீண்டல்களின் மூலம், “யார் இந்த பையன், சைகோ மாதிரி விளையாடுகிறானே” என பலரால் எண்ண வைத்த அவரது உடல் பாவனைகள் தான், இன்று டிவிட்டர் முதல் டிவின் டவர் வரை பேசப்படும் நிலைக்கு இமையம் தொட்டுள்ளார்.

உலகின் முன்னணி நட்சத்திரங்களான ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகிய இருவரையும் நடப்பாண்டு “மாட்ரிட் ஓபன்” தொடரில் வீழ்த்தி, இந்த வருடத்தின் சிறந்த செய்தியாக உருவெடுத்த அல்கரஸ், தற்போது தனது 19 வயதில் உலகின் முதல் நிலை வீரராக உருவெடுத்து ஸ்பெயினிற்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் தொடரில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி, 2005 க்கு பிறகு நடாலை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், அமெரிக்க ஓபன் பட்டத்தை தனதாக்கியுள்ளார் கார்லஸ் அல்கரஸ்.

1990 ஆம் ஆண்டு பீட் சாம்ப்பிராஸ் தனது 19 வது வயதில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றதே வரலாறாக பேசப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு 3 வது இளம் வீரர் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளது தற்போது வரலாறாகியுள்ளது.

அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில், நார்வேயை சேர்ந்த காஸ்பர் ரூட் ஐ எதிர்கொண்ட, தனக்கே உரிய பாணியில் முதல் செட்டை 6-4 என தன்வசப்படுதினார். அதன் பின் தன் தந்திரத்தை நிகழ்த்திய அல்கரஸ் 2-6 என இரண்டாவது செட்டை கைவிட்டு, தொடர்ந்து மூன்றாவது செட்டை 7-6 எனவும் நான்காவது செட்டை 6-3 எனவும் கைப்பற்றி, போட்டியை 3-1 என்ற புள்ளி கணக்கில் வென்று வரலாறு படைத்தார்.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவிய நார்வேயை சேர்ந்த காஸ்பார் ரூட், இரண்டாம் இடம் பிடித்தார்.

காஸ்பர் ரூட்டை ஏற்கனவே அல்கரஸ், நடப்பாண்டு மியாமி ஓபன் தொடரில் வீழ்த்தி பட்டம் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக நடப்பாண்டில் மட்டுமே 6 பட்டங்களை வென்றுள்ள அல்கரஸ், இந்த வருடத்தில் மட்டும், ரியோ ஓபன், மியாமி ஓபன், மாட்ரிட் ஓபன் என முக்கிய பட்டங்களை வென்றதுடன், தற்போது அமெரிக்க ஓபன் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஸ்பெயின் நட்சத்திரம் நடாலுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு நுழைந்த இரண்டாவது ஸ்பெயின் நட்சத்திரம் என்ற பெருமையும், நுழைந்த முதல் தொடரிலேயே அமெரிக்கா ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையும் கார்லஸ் அல்கரஸ்யையே சேரும். தனது ஒவ்வொரு போட்டியின் போதும், கணத்த இதயத்துடன் கைகளை கோர்த்தபடி அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் அல்கரஸின் தந்தை, ஒவ்வொரு புள்ளிக்கும் தன் தந்தையை பார்த்து “இது உனக்காக தான்” என மிடுக்காக சொல்லும் தொனி உள்ளிட்டவைகள் எல்லாம், பார்ப்பவர்களை பேரானந்தம் கொள்ள செய்யும்.

அமெரிக்க ஓபன் சாம்பியன் ஓட்டம் வென்ற பின்பு, கார்லஸ் அல்கரஸ் பார்வையாளர்கள் இருக்கைகளில் ஏறி தனது தந்தை இருக்கும் இடத்திற்கே சென்று, கண்ணீர் மல்க கட்டியணைத்த காட்சிகள், போட்டி நடந்த அரங்கத்தில் அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ட்ரிக்கர் ஷாட், பேக் வேலி, கட் ஷாட், என பல வித்தைகளை தனது ஸ்டையிலில் அரங்கேற்றிய அல்கரஸ், தனது 19 வது வயதிலேயே, தன்னை விமர்சித்த பலருக்கு கொடுத்த ட்ரீட் தான், அமெரிக்க ஓபன் பட்டம். பலருக்கு நிறைவேறாத கனவாக பார்க்கப்படும் அமெரிக்க ஓபன் பட்டத்தை அல்கரஸ் வென்றது மட்டும் இன்றி, தற்போது டென்னிஸ் வரலாற்றிலேயே, இளம் வயதிலேயே உலகின் நம்பர் ஒன் வீரராக முன்னேறி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார் இந்த குறும்புத்தனம் கொண்ட, புத்திசாலித்தனமான சிறுவன்.

டென்னிஸ் ரசிகர்களிடையே, பல வருடங்களாக இருந்து வந்த எதிர்பார்ப்புகளை, புதியவர்கள் பூர்த்தி செய்ய மாட்டார்களா என்ற கேள்விக்கு, தற்போது பதில் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஆம், எப்போதுமே பெரிய பெரிய தொடர்களில் எல்லாம், பலமுறை பட்டம் வென்றவர்கள் மட்டுமே, தொடர்ந்து பட்டங்களை குவித்து வரும் நிலையில், புதுமுகங்கள் இனி உருவாக வாய்ப்பை இல்லையா என்ற கேள்விக்கான பதில், தற்போது அந்த வெற்றிடத்தை நிறப்பியுள்ளது.

 

 

2020 ஆம் ஆண்டு பட்டம் வென்ற தீம், 2021 இல் மெட்வெடேவ், நடப்பாண்டில் கார்லஸ் அல்கரஸ் எனும் பட்டாளம், இதுவரை வழக்கமாக இருந்த ரோஜர் பெடரர், ஜோகோவிச், நடால் போன்ற ஜாம்பவான்கள் தொட்ட இலக்குகளை மீண்டும் தொட ஆரம்பித்து விட்டனர். இனி வரும் காலம் இவர்கள் காலம் என உலக அரங்கில் நிரூபித்து வருகின்றனர்.

எது எப்படியாயினும், ஸ்பெயின் நட்சத்திரமான நடாலுக்கு பிறகு, அதே ஸ்பெயினில் இருந்து தீயாக புறப்பட்டு இருக்கும் அல்கரஸ், இளம் வயதிலேயே இமையங்களை தொட ஆரம்பித்து விட்ட நிலையில், வருங்கால டென்னிஸ் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னனாக விளங்குவார் என்பதில், எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்பது, வருங்காலத்தில் எழுதப்பட உள்ள வரலாறாகும்.

– நாகராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.