ஏழைகள் நலனே மத்திய அரசுக்கு முக்கியம்: தர்மேந்திர பிரதான்

ஏழைகள் நலன்தான் மத்திய அரசுக்கு மிகவும் முக்கியம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தர்மேந்திர…

ஏழைகள் நலன்தான் மத்திய அரசுக்கு மிகவும் முக்கியம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தர்மேந்திர பிரதான், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நாட்டின் பொருளாதாரம் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார். ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என்றும், அந்நிய செலாவனி கையிருப்பு அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்த தர்மேந்திர பிரதான், ஜிஎஸ்டி அமலாக்கம் உள்பட கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்றார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய தர்மேந்திர பிரதான், இந்த 8 ஆண்டுகளில் ஏழைகள் நலனே அரசின் பிரதான நோக்கமாக இருந்துள்ளது என்றார்.

ஹைதராபாத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வருகை தராதது ஏற்கத்தக்கது அல்ல என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி விமர்சித்துள்ளார்.

இதன் மூலம் நரேந்திர மோடி எனும் தனி நபரை அவர் அவமதிக்கவில்லை என்றும் நாட்டின் பிரதமரை; அரசின் அமைப்பை அவமதித்துவிட்டார் என குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய், சிறுத்தை வரும்போது சிறு நரிகள் ஓடிவிடும் என்றும் அதுபோல, ஹைதராபாத்துக்கு சிறுத்தை வந்துள்ள நிலையில், சிறு நரி ஓடிவிட்டது என்று பெயரைக் குறிப்பிடாமல் முதலமைச்சர் சந்திரசேகர ராவை விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.