பாஜக சிபிஎம் இடையே நெருக்கம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
3 நாள் பயணமாக கேரளா சென்றுள்ள ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டிலும் பின்னர் மலப்புரத்திலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் உரை நிகழ்த்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, நாட்டின் அரசியல் சாசனத்தை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அபகரித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக பொதுமக்களின் குரல்கள் நசுக்கப்படுவதாக அவர் விமர்சித்தார்.
பாஜகவைக் கண்டு காங்கிரஸ் அச்சம் கொள்ளாது எனக் கூறிய ராகுல் காந்தி, நாட்டின் ஒற்றுமையை அவர்கள் சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என தெரிவித்த ராகுல், ஆனால் பாஜக வன்முறையில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.
நாட்டின் பொருளாதார அடித்தளத்தின் மீது பாஜக தாக்குதல் நடத்தி வருவதாகவும் ராகுல் விமர்சித்தார்.
சமீபத்தில் அமலாக்கத்துறை தன்னிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தியதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, அவ்வளவு குறைவான நாட்கள் விசாரணை நடத்தியது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். எப்படியும் தன்னிடம் 10 நாட்களாவது அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என்றே தான் எண்ணியதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.
அவர்கள் மீண்டும் தன்னிடம் விசாரணை நடத்துவார்கள் என்றே தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் பாஜக, தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தாததற்குக் காரணம் உள்ளது என்றார். ஏனெனில், பாஜகவுக்கும் சிபிஎம் கட்சிக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதாகவும், அந்த புரிந்துணர்வுதான் இதற்குக் காரணம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.