29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

‘ஒன்றியம் – யூனியன் என்பது தவறான சொல் அல்ல’ – முதலமைச்சர்

இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள்தான், இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல! பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு. ஒன்றியம் – யூனியன் என்பது தவறான சொல் அல்ல. அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை வரையறுக்கப் பயன்படுத்தும் சொல் யூனியன்தான் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கேரள மாநிலம், திருச்சூரில் மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற ‘இந்தியா – 75’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மலையாள மனோரமா இதழில் சார்பில் நடைபெறும் ‘இந்தியா – 75 ஆண்டுகள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் காணொலி மூலமாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். மேலும், திருச்சூருக்கு நான் நேரில் வந்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர், இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்டதால் உடல் சோர்வு உள்ளதால், வெளியூர்ப் பயணங்களை ஓரிரு வாரங்களுக்குத் தவிர்க்க மருத்துவர்கள் சொல்லிய காரணத்தால் அங்கு நேரில் வர இயலவில்லை என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் கண்ணூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தான் வந்திருந்தபோது, தனக்கு கேரள மாநில அரசும், மக்களும் அளித்த வரவேற்பை இன்னும் மறக்க முடியவில்லை என கூறினார். தான் பேசி முடித்ததும் – ‘ரெட் சல்யூட் – ரெட் சல்யூட்’ என்று சொல்லி தனக்கு அந்த மாநாடே வாழ்த்து தெரிவித்த காட்சி நெஞ்சில் நிழலாடி வருவதாக தெரிவித்த அவர், தன்னையும் தங்களில் ஒருவராக நினைத்து கேரள மாநில மக்கள் வரவேற்பு கொடுத்து செல்பி எடுத்துக் கொண்டார்கள் என கூறினார். மேலும், அத்தகைய மகிழ்ச்சியான நினைவுகளுடன் திருச்சூருக்கு வர நினைத்தேன், ஆனால், வர முடியவில்லை எனக் கூறினார்.

மலையாள மனோரமா இதழானது 1890-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று இந்தியா முழுமைக்கும் அதிகமான வாசகர்களைக் கொண்ட இதழாக இருக்கிறது. மலையாள மனோரமா செய்தி நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. வெறும் செய்தி நிறுவனமாக மட்டுமல்லாமல் தனக்கென ஒரு கொள்கை – கோட்பாடு கொண்ட நிறுவனமாக இருந்ததால் பல்வேறு சோதனைகளைச் சந்தித்த செய்தி நிறுவனம் இது. அத்தகைய துணிச்சல்தான் இந்தளவுக்கு இந்த நிறுவனத்தை வளர்த்துள்ளது. கேரளாவைப் பொறுத்தவரையில், மலையாள மனோரமா என்பது பெரும்பாலானவர் குடும்பத்தில் ஓர் அங்கம் என்று சொல்லத்தக்க நிலையை அடைந்துள்ளது. அத்தகைய பெருமைமிகு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.

அண்மைச் செய்தி: ‘தேர்தல் ஆணையம் ஆலோசனை; இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு’

தொடர்ந்து பேசிஅய அவர், இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, India 75 – The state of affairs – Federalism, Freedom and Forward – என்ற இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டாட்சிக் கருத்தியலும் – விடுதலையால் பெற்ற உரிமைகளும் – அனைத்துவிதமான வளர்ச்சிக்கான முற்போக்குச் சிந்தனைகளும் இணைந்துதான் இந்தியாவை இந்தளவுக்கு வளர்த்துள்ளன. இந்தியாவின் வேற்றுமைகளை மதிக்கக் கூடியவராக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இருந்தார்கள் என தெரிவித்த அவர், பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழிவாரி மாகாணங்களை உருவாக்கிக் கொடுத்தார் பிரதமர் நேரு. இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி அவர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார் பிரதமர் நேரு. ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டுவந்து அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார்.

வறுமை ஒழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தினார். அனைத்து மாநிலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கித் தந்தார். மதச்சார்பற்ற மனிதராக அவர் இருந்தார். சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை நடத்திக் காட்டினார். கூட்டாட்சி நெறிமுறைகளை அவர் அடிக்கடி பேசினார். இந்தியா முழுவதும் இருந்த பல்வேறு மாநில முதலமைச்சர்களோடு அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தினார். கடிதங்கள் எழுதினார். முதலமைச்சர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களே பல்வேறு தொகுப்புகளாக வெளியாகி இருக்கிறது. இத்தகைய காரணங்களால்தான் இந்தியாவானது 75 ஆண்டுகள் வலிமையோடு நின்று கொண்டு இருக்கிறது என கூறினார்.

இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க வேண்டுமானால் இதே கருத்தியல்களை மேலும் மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், கூட்டாட்சி, மாநிலத் தன்னாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், சமூகநீதி இவற்றை நாம் வலிமைப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் காப்பாற்றுவதுதான், இந்தியாவைக் காப்பாற்றுவது. 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது என்பது வெறும் கொண்டாட்டமாக இருக்கக் கூடாது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையோடு இருப்பதற்கான திட்டமிடுதலாக நமது சிந்தனைகள் அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தியா என்பதை வெறும் நிலப்பரப்பின் எல்லைகளாக நாம் கருதக் கூடாது என குறிப்பிட்ட அவர், இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள்தான், இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல! பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு. ஒன்றியம் – யூனியன் என்பது தவறான சொல் அல்ல. அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை வரையறுக்கப் பயன்படுத்தும் சொல் யூனியன்தான்.

இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய ஒன்றியத்துக்குள் உள்டங்கியுள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும். தமிழ்நாட்டின் மாபெரும் அடையாளமான பேரறிஞர் அண்ணா கூறியது போல, ஒரே போல ஆக்குவது என்பது ஒற்றுமையில் இருந்து வேறுபட்டது. ஒற்றைத்தன்மையைத் திணிப்பதன் மூலம் ஒற்றுமையைக் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழி ஆக முடியாது. ஏனென்றால் இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. இந்தியாவுக்கு ஒற்றை மதம், அனைவர்க்குமான மதமாக இருக்க முடியாது. ஏனென்றால், இந்தியாவில் பல்வேறு மத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. இந்தியாவில் ஒற்றைப் பண்பாடு இல்லை. உணவு, உடை அனைத்திலும் ஆயிரம் வேறுபாடுகள். இவ்வளவு வேற்றுமைகளை வைத்துக் கொண்டும் ஒன்றாக வாழ – நமக்குள் இருப்பது அன்பும் மனிதநேயமும் மட்டும்தான். ஒற்றை மொழியை – ஒற்றை மதத்தை – ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள். இந்திய ஒற்றுமையைச் சிதைக்க நினைப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள்.
இந்திய மக்களின் எதிரிகள்.

இந்தத் தீய சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை, வலிமையான – அதிகாரம் பொருந்திய – தன்னிறைவு பெற்றவையாக மாநிலங்கள் இருப்பது இந்தியாவுக்கு வலிமைதானே தவிர, அது பலவீனமல்ல, வலிமையான – வசதியான – தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களால் இந்தியாவுக்குப் பயன்தானே தவிர, குறைவு ஏற்படாது!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும்தானே நன்மை கிடைக்கிறது? ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. தமிழ்நாட்டின் பங்கு என்பது இந்தியாவுக்குத்தானே நன்மை? மாநில அரசுகள் மிகச்சிறப்பாக மாநிலங்களை வழிநடத்துவதால் ஒன்றிய அரசு பலம் அடையுமே தவிர, பலவீனம் அடையாது! இன்னும் சொன்னால், மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள்தான்!

மக்களின் அனைத்து அன்றாடத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. எனவே, மாநில அரசுகளைத் தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மாநிலங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இருக்க வேண்டும். இந்திய அரசானது கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்துச் செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நாம் ஏற்க முடியாது. அதனை வலிமையாக, உறுதியாக, ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றங்களில்- பேசுவதற்கான உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். கருத்தைச் சொல்வதற்கான களமான நாடாளுமன்றத்தில்கூட பேச உரிமை இல்லை. இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை! சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடாக தரப்படும் நிதி உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை. முழுமையாகவும் தருவது இல்லை. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் எளியோருக்குக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன. ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பாஜக தலைமை. இவை அனைத்துக்கும் இடையில்தான் மாநிலங்களில் ஆட்சி நடத்தியாக வேண்டும். அரசியல் நடத்தியாக வேண்டும். மக்கள் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாக வேண்டும். அதற்காக நான் நம்பிக்கை இழக்கவில்லை. இந்தியாவின் மிக நீண்ட வரலாறும் – இந்திய மக்களின் சகோதர உணர்வும் –இந்தியாவை நிச்சயம் காக்கும் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading