மதுரை மாவட்டம் மேலூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து நகை பறிக்க முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் நகரில் உள்ள பிஸ்மில்லா நகர் பகுதியில் மூதாட்டி ஆமினா பீவி தனது மருமகளுடன் வசித்து வருகிறார். மருமகள் வெளியே சென்றிருந்த நேரத்தில் மூதாட்டி ஆமினா பீவி மட்டும் வீட்டில் இருந்துளார். அப்போது பட்டப்பகலில் டிப்டாப் உடையணிந்தபடி இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஆமினா பீவியின் வீட்டு வாசலில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் வீட்டை நோட்டமிட்டுவிட்டு உள்ளே நுழைந்துள்ளார்.
மூதாட்டியிடம் ஏதோ கேட்பது போல் வந்த அந்த நபர், திடீரென மறைத்து வைத்திருந்த நீளமான கத்தியை எடுத்து மூதாட்டியின் கழுத்தில் வைத்து செயினை பறிக்க முயன்றுள்ளார். மூதாட்டி தடுக்க முயன்ற போது கையில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு அலறியுள்ளார். இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைகளை பறிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.








