தொண்டர்களை ஒருங்கிணைத்து உற்சாகப்படுத்தும் அதிமுகவின் முதல் போராட்டம்!

நாம் வாழ்வதெல்லாம் மக்களுக்காகவே! நம் முழக்கமெல்லாம் எல்லாரும் எல்லாமும் பெறுவதற்காகவே! என்னும் வாசகத்தை தாரக மந்திரமாக வைத்து எதிர்க்கட்சியாக முதல் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. விடியல் தரப்போவதாக வாக்குறுதியளித்த திமுக அரசே! வாக்களித்து வெற்றி…

நாம் வாழ்வதெல்லாம் மக்களுக்காகவே! நம் முழக்கமெல்லாம் எல்லாரும் எல்லாமும் பெறுவதற்காகவே! என்னும் வாசகத்தை தாரக மந்திரமாக வைத்து எதிர்க்கட்சியாக முதல் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக.

விடியல் தரப்போவதாக வாக்குறுதியளித்த திமுக அரசே! வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களை வஞ்சிக்காதே! என்பது தான் அதிமுக நடத்தும் கவன ஈர்ப்பு போராட்டத்தின் கரு. நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, எரிவாயு, சிலிண்டருக்கு மானியம், குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கிய திமுக அரசு எதையுமே நிறைவேற்றவில்லை என்பது அதிமுகவினரின் குற்றச்சாட்டு. இப்படியான காரணங்களுக்காக வரும் புதன்கிழமை தங்களின் வீடுகளுக்கு முன்பாகவே பதாதகைகளை ஏந்தி, கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்புமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்திருக்கும் திமுகவிற்கு கொரானா தடுப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அரசு இயந்திரங்கள் முழுவதும் கொரானா தடுப்பு பணியில் கவனம் செலுத்தினாலும் மக்கள் வரவேற்பை பெறும் வகையில் சில வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவற்றில் கொரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைக்கு ரூ.4000 நிவாரணம், அரசுப் பேருந்துகளில் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இருப்பினும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை இன்னும் தொடங்காதது, பெட்ரோல் டீசல் விலையை குறைக்காதது மக்களிடையே சற்று ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் நலனில் பெரிதும் அக்கறை காட்டாத அரசை எதிர்த்து நடைபெறும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டமாக அமையும் என்கிறார் அதிமுகவின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன். கொரோனா காலகட்டம் என்பதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவரவர் வீடுகள் முன்பாகவே பதாதகைகள் ஏந்தி ஆளுங்கட்சி செவிசாய்க்கும் அளவிற்கு கண்டன குரல்களை எழுப்ப முடிவு செய்திருப்பதாக வைகைச் செல்வன் கூறுகிறார்.

தமிழ்நாட்டு அரசியலின் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் போராட்டம் நடத்துவதற்தான உரிமை இருந்தாலும் மேலும் சில காரணங்களை மையமாக வைத்து இந்த போராட்டம் நடத்தப்படலாம் என சந்தேகிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை பிரச்னை, சசிகலாவின் ஆடியோ, கூட்டணி கட்சிகளுடன் கருத்து வேறுபாடு திமுகவில் இணையும் அதிமுகவினர், முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் ரெய்டு இன்னபிற காரணங்களும் அதிமுகவின் போராட்டத்திற்கு மறைமுக காரணமாக இருக்கலாம் என்கிறார் ப்ரியன்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களால் சோர்வடைந்திருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், நிர்வாகிகளை ஒருங்கிணைக்கவும் இந்த போராட்டம் அதிமுகவுக்கு உதவலாம். பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக தன்னுடைய முதல் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் மக்கள் நலன்சார்ந்த பிரச்னைகளுக்கான தொடர் போராட்டமே, தமிழ்நாடு அரசியலில் அதிமுகவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.