பொருளாதார வளர்ச்சி அடையாத ஏழை நாடுகளுக்கு வெறும் 0.2 % மட்டுமே கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா சபையின் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானெம் கவலை தெரிவித்துள்ளார்.
உலகளவில் 700 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி விநியோகம் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு 87% விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் ஏழை நாடுகளுக்கு 0.2 % மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானெம் கூறுகையில், “கொரேனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் தடுப்பூசியின் விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு உள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் நான்கில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் ஏழை நாடுகளில் 500 பேரில் ஒருவருக்குதான் கொரோனா தடுப்பூசி கிடைக்கிறது என்பது எவ்வளவு ஏற்ற தாழ்வு நிறைந்தது.
உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள ‘COVAX’ தடுப்பூசியை அனைத்து தரப்பட்ட மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்வதுதான் இங்கு பிரச்சினையாக உள்ளது. சில நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்கள் தங்கள் சொந்த அரசியல் அல்லது வணிக காரணங்களுக்காக ஐ. நா சார்பில் இலவசமாக வழங்கப்படும் ‘COVAX’ தடுப்பூசியைத் தவிர்கக திட்டமிட்டுள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மருத்துவ வணிக நிறுவனங்களின் இந்த ஏற்றத்தாழ்வுகள் காரணமாக மக்கள்தான் தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கின்றனர்” என அவர் கூறியுள்ளார்.







