உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில் ஜி20 நாடுகள் கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மேலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் அதற்கு பதிலாக அந்த நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி தெரிவித்ததாவது..
இந்த மாநாட்டின் முறையான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன், மொராக்கோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். ஒட்டுமொத்த உலக சமூகமும் மொராக்கோ மக்களுடன் நிற்கிறது.
ஜி20 மாநாட்டின் தலைவராக உங்கள் அனைவரையும் இந்தியா வரவேற்கிறது. ஜி 20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் புதிய உறுப்பினராக இணைந்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். அனைவரின் ஒப்புதலுடன், ஆப்பிரிக்கா யூனியன் நிரந்தர உறுப்பினராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதன் பின்னர் ஜி20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து விரைவில் கூட்டறிக்கை வெளியிடப்படவுள்ளது.
மேலும் உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டறிக்கை வெளியாக உதவிய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.







