யுஜிசி தேர்வர்களுக்கான விடைத்தாள்கள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நாளை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு நான்கு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது. முதல் கட்டமாக ஜூலை 9 முதல் ஜூலை 12 வரை நடைபெற்றது. இரண்டாம் கட்டம் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 23ஆம் தேதி முடிவடைந்தது. மூன்றாவது கட்டம் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற்றது. இறுதிக்கட்டத் தேர்வு அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது.
யுஜிசி தேர்வர்களுக்கான விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் நாளை (5-ம்தேதி) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட் (UGC NET 2022) முடிவுகள் தேசிய தேர்வு முகமை இணையதளங்களான ugcnet.nta.nic.in மற்றும் ntaresults.nic.in என்ற இணையதள பக்கங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








